தமிழ்நாடு

tamil nadu

ஓட்டு போடாததற்கு இது தான் காரணமா? ஜோதிகா பதில்! - actress jyothika political entry

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 5:00 PM IST

Actress Jyothika: இயக்குநர் துஷார் இயக்கத்தில் உருவாகி உள்ள ஸ்ரீகாந்த் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகை ஜோதிகா அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை எனவும், நானும் சூர்யாவும் சேர்ந்து நடிப்பதற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்றார்.

நடிகை ஜோதிகா புகைப்படம்
நடிகை ஜோதிகா புகைப்படம் (credit to etv bharat tamil nadu)

ஸ்ரீகாந்த் பட செய்தியாளர் சந்திப்பில் ஜோதிகா (Video Credits - ETV Bharat TamilNadu)

சென்னை: இயக்குநர் துஷார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம், ஸ்ரீகாந்த். இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா டீச்சராக நடிக்கிறார். இப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே.3) சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் துஷார் மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை ஜோதிகா பேசும்போது, "இப்படம் எனது திரை வாழ்வில் முக்கியமான படம். இது நம் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். ஸ்ரீகாந்த்தைப் பார்க்கும் போது பார்வையற்றவர் மீதான எனது பார்வை முற்றிலும் மாறிவிட்டது. அவர்கள் மிகவும் புத்திசாலிகள். காக்க காக்க, ராட்சசி படத்துக்குப் பிறகு நான் டீச்சராக நடிக்கும் 3வது படம் இது. எந்த மொழிப் படமாக இருந்தாலும் சரி, நான் சரியான டீம் உடன் பணிபுரிந்துள்ளேன்.

வாழ்க்கையில் முதல் டீச்சர் எனது அம்மாதான். இப்போது வரை மிகப்பெரிய டீச்சர் எனது அம்மாதான். அவங்கதான் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளியில் நிறைய டீச்சர்கள் இருந்தனர். இப்படத்தில் எனக்கு நல்ல ரோல் கிடைத்துள்ளது.

இதுபோன்ற கதாபாத்திரம் கிடைப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எந்த ஆண் அல்லது பெண்ணிற்குப் பின்னாலும் உந்துதல் தரும் ஒருவர் இருப்பார். அதுமாதிரி வேடங்களில் நடிப்பது நன்றாக உள்ளது. டீச்சர் கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

எனக்கு தனி நாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இரண்டு காட்சிகள் வந்தாலும் அழுத்தமானதாக இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு நான் ரியல் லைஃப் பெண்களைப் பார்த்தேன். மாமியார் உறவினர்கள் ஆகியோரைப் பார்த்துள்ளேன். அதனை எனது கதாபாத்திரத்தில் பிரதிபலிக்கிறேன். இதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய முடிகிறது.

நடிப்பு தேர்வைவிட அதிர்ஷ்டமும் முக்கியம். எந்த பிளானும் இல்லாமல் தான் நடித்து வருகிறேன். திருமணத்துக்கு முன்பு ஆறு ஆண்டுகள் மட்டுமே நடித்தேன்.‌ திருமணத்துக்குப் பின் சில ஆண்டுகள் நடிக்காமலிருந்தேன். பின்னர் நடிக்க வந்தேன். கரோனாவால் மீண்டும் நடிக்கவில்லை.

பின்னர், கதை பிடித்ததால் மலையாளப் படம் நடித்தேன். வேறு எந்தத் திட்டமும் இல்லை. பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கிறேன். இப்போது எந்தப் படமும் ஒப்பந்தம் ஆகவில்லை. நல்ல கதைக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். பசங்களை வீட்டில் விட்டுவிட்டு படப்பிடிப்பு செல்ல வேண்டும், அது மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதற்கு முன் ஸ்ரீகாந்த் போலா பற்றி எனக்குத் தெரியாது. இங்கு கொண்டாடப்படாத நாயகர்கள் நிறைய பேர் உள்ளனர். நானும் அதுபோன்ற கதைக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன். தினமும் நிறையக் கதைகள் கேட்கிறேன். வித்தியாசமான கதை இருந்தால் நிச்சயம் தமிழில் நடிப்பேன்” என்றார்.

ஏன் இன்னும் அரசியலுக்கு வரவில்லை என்ற கேள்விக்கு, யாருமே கேட்கவில்லை என்றார். மேலும், “இப்போதைக்கு அரசியல் எண்ணம் இல்லை. எனது இரண்டு குழந்தைகளும் படிக்கிறார்கள். அதையும் நடிப்பையும் சமநிலையில் பார்த்து வருகிறேன். அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை” என்றார். ஏன் ஓட்டுப்போடவில்லை என்ற கேள்விக்கு, ஒவ்வொரு முறையும் ஓட்டுப் போடுவேன். சில நேரங்களில் சில காரணங்களால் போடமுடியாமல் போகும்.

புதிய இயக்குநர்கள் புதிய சிந்தனைக் கதைகளுடன் வருகின்றனர். சூர்யாவுடன் எப்போது மீண்டும் சேர்ந்து நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, அதுபோன்ற கதை இன்னும் வரவில்லை. நானும், சூர்யாவும் இதற்காக 15 ஆண்டுகளாக காத்துக்கொண்டு இருக்கின்றோம். அப்படி நல்ல கதை வந்தால் நிச்சயம் நடிக்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்றார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நிறைய என்ஜிஓக்கள் உடன் இணைந்து பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறோம். ஒரு குழுவாக இணைந்து பணியாற்றி வருகிறோம். எதிர்காலத்தில் கண்டிப்பாகத் தனியாக எதாவது செய்யலாம். உங்களுடைய குழந்தைகள் சினிமாவுக்கு வருவார்களா என்ற கேள்விக்கு, அவர்கள் நிச்சயமாக சினிமாவுக்கு வரமாட்டார்கள். அவர்கள் கவனம் முழுவதும் தற்போது படிப்பின் மீது தான் என்றார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, இது அவுட் ஆஃப் தி டாபிக்" என்று முடித்துக்கொண்டார்.

இதையும் படிங்க:ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்! சோனியா, பிரியங்கா காந்தி முன்னிலையில் வேட்புமனு தாக்கல்! - Rahul File Nomination In Rae Bareli

ABOUT THE AUTHOR

...view details