தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் இரண்டு துண்டுகளான புதிய வீடு.. பொதுப்பணித்துறையின் கவனக்குறைவு தான் காரணமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 9:42 PM IST

Puducherry house collapse: உப்பனாறு வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக, புதுச்சேரியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த 3 மாடி வீடு சாய்ந்து முழுவதுமாக இடிந்து விழுந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் தரைமட்டமான புது வீடு
புதுச்சேரியில் தரைமட்டமான புது வீடு

புதுச்சேரியில் தரைமட்டமான புது வீடு

புதுச்சேரி:புதுச்சேரியின் நகரத்தின் மேட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் உப்பனாறு வாய்க்கால் வழியாகச் செல்கிறது. பல ஆண்டுகளாக இப்பகுதி சீரமைக்கப்படாமல் உள்ள நிலையில் காமராஜர் சாலையிலிருந்து மறைமலை அடிகள் சாலை வரை வாய்காலிற்கு மேல் பாலம் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஒப்பந்ததாரர்களுக்கு உரியப் பணம் தராத காரணத்தால் மேல் பாலம் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மறைமலை அடிகள் சாலையைத் தாண்டி ஆட்டுப்பட்டி வழியாக வாய்க்காலின் கரையைப் பலப்படுத்திச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வாய்க்காலின் மண் அள்ளும் பணியில் ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்கள் ஈடுபட்டது.

இந்த சீரமைப்பு பணி காரணமாக வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்தகவல் அறிந்து தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வும் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் மற்றும் அப்பகுதி மக்கள் கூடி வாய்க்கால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாய்க்காலுக்கு அதிகப்படியான மணல் தோண்டுவதால் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டுப்பட்டு ரங்கநாதன்-சாவித்திரி தம்பதியினர் கட்டி உள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கு வருகின்ற 11ஆம் தேதி புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக வீடு இரண்டு துண்டாக வாய்காலில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பொதுப்பணித் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஒப்பந்ததாரர் அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததாகக் குற்றச்சாட்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து வீடு இடிந்தது பற்றி நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, உரிமையாளருக்கு உரிய இழப்பீடு முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலச் செயலாளர் அன்பழகன் மற்றும் உரிமையாளரிடம் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:அரசியல் கலந்த ஆன்மீகத்தை நிர்மலா சீதாராமன் செய்கிறார் - அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details