தமிழ்நாடு

tamil nadu

டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்.. மூவர்ண கொடியை ஏற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 1:37 PM IST

Updated : Jan 26, 2024, 4:12 PM IST

Delhi Republic Day celebrations: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடி எற்றி வைத்தார். மேலும் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இந்தியாவிற்குக் குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Republic Day celebrations in Delhi President Droupadi Murmu hoisted the National Flag
ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றினார்

டெல்லி:நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப் பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் இந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக ஜனாதிபதி வருகையின் போது அவருக்கு 105 மி.மி இந்தியன் ஃபில்ட் கன் 21 குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது. இந்த குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், இந்த ஆண்டு சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

75வது குடியரசு தின விழா விக்சித் பாரத் (Viksit Bharat) பாரத்: லோக்தந்த்ரா கி மாத்ருகா (Bharat: Loktantra ki Matruka) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. கடமைப் பாதையில் நடைபெற்ற அணிவகுப்பில் முப்படைகளைச் சேர்ந்த வீராங்கனைகள் அணிவகுப்பு கம்பீரமாக நடைபெற்றது. மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்த்திகளின் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.

மேலும் இந்த அணிவகுப்பு நிகழ்வில் பிரான்ஸ் வீரர்கள் 95 பேரும், பிரான்ஸ் இசைக்குழுவினர் 33 பேரும் கலந்து கொண்டனர். முன்னதாக பிரான்ஸ் பாஸ்டில் டே கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் போற்றும் வகையில் இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டதன் மூலம் இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட 6வது பிரான்ஸ் அதிபர் ஆனார்.

மேலும், 75வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியாவிற்கு நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், தூதரகங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “எத்தனை அழுத்தங்கள் இருந்த போதிலும் இந்தியாவும் பிரதமர் மோடியும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் உறவைப் பலப்படுத்தும் வகையில் வேகமாக முன்னேற்றி வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், “2030ஆம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் பிரான்ஸில் கல்வி கற்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இந்த லட்சிய இலக்கை சாதித்துக் காட்ட உறுதியாக இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்திய மாணவர்கள் பிரான்சில் படிப்பதை எளிதாக்கும் வகையில் சர்வதேச வகுப்புகளை உருவாக்க உள்ளதாகவும், இந்தியாவில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு விசா நடவடிக்கையை எளிமைப்படுத்த உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் இந்தியாவிற்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்களது அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதில் தூதரக அதிகாரிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அந்த வீடியோவில், இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் நோர் கிலோன் கதர் வேட்டி, சட்டை அணிந்து தமிழில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஷ்யா தூதரகம், ஆஸ்திரேலிய பிரதமரும் குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “இந்தியாவிற்கு 75வது குடியரசு தின வாழ்த்துக்கள். எதிர்காலத்திற்கான நட்புறவு, பரஸ்பர பெருமை கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டு தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இந்தியா உடன் மாலத்தீவின் உறவு தற்போது சச்சரவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் இந்தியாவிற்குக் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த 75வது குடியரசு தின சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் நீண்டகாலமாக இருந்து வரும் உடைக்க முடியாத நட்பு மேலும் வலுப்பெறட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் சார்பாக அமெரிக்கத் தூதர் இந்தியாவிற்குக் குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு நாட்டு அதிபர்களும், அதிகாரிகளும் இந்தியாவிற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் குடியரசு தின விழா: களைகட்டிய அணிவகுப்பு.. விருது பெற்றவர்கள் விவரம் உள்ளே

Last Updated : Jan 26, 2024, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details