தமிழ்நாடு

tamil nadu

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம்- உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்! - Covishield Vaccine Side Effects

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 2:22 PM IST

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறந்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுகளின் அளவு குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு காப்புரிமை பெற்று இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்து வெளியிட்டது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் அரிதாக ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

கரோனா பரவல் காலக்கட்டத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி நாடு முழுவதும் 170 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் கரோனா பரவலுக்கு பின்னர் நாட்டில் அதிகளவில் இளம் சமுதாயத்தினரிடையே மாரடைப்பு மற்றும் அசாதாரண மரணங்கள் நிகழ்வது அதிகரித்துள்ளன.

இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் இந்திய குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, இந்த பிரச்சினையை மத்திய அரசு முன்னுரிமையில் கவனிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கரோனா பரவலின் போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் மற்றும் உயிரிழந்த்வர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்க உத்தரவிடக் கோரியும் மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் மிக அரிய வகையாக டிடிஎஸ் எனப்படும் ரத்த உறைதல் மற்றும், ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தடுப்பூசியை கண்டுபிடித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் வருமா? அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கூறுவது என்ன? - Covishield Vaccine Side Effects

ABOUT THE AUTHOR

...view details