தமிழ்நாடு

tamil nadu

“ஹேமந்த் சோரனின் மனைவியை ஜார்கண்ட் முதலமைச்சராக்க உள்ளார்” நிஷிகாந்த் துபே

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 11:59 AM IST

Updated : Jan 30, 2024, 12:32 PM IST

Hemant Soren: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மாயமானதாகக் கூறப்படும் நிலையில், அவரது மனைவியை ஜார்கண்ட் முதலமைச்சராக்க உள்ளார் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nishikant Dubey said Hemant Soren wife is going to be made the Chief Minister of Jharkhand
ஹேமந்த் சோரனின் மனைவியை ஜார்கண்ட் முதலமைச்சராக்க உள்ளார்

ராஞ்சி:ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது எழுந்த நிலக்கரி சுரங்க முறைகேடு,பணமோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல், சம்மனுக்கு பதிலளிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் 8வது முறையாகச் சம்மன் அளித்துக் கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஹேமந்த் சோரன் வீட்டில் அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் ஜனவரி 29 முதல் 31ஆம் தேதிக்குள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லை என்றால் விசாரிக்க நாங்கள் வருவோம் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த முறையும் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல், சம்மனுக்கு பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார். மேலும், ஹேமந்த் சோரன் திடீர் பயணமாக டெல்லி சென்றிருப்பதாகக் கூறப்பட்டது. இதனை அறிந்த அமலாக்கத்துறையினர் நேற்று காலை 9 மணி அளவில் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது ஹேமந்த் சோரன் வீட்டில் இல்லை எனவும், அங்குள்ள நபர்கள் யாருக்கும் அவர் எங்கு சென்றுள்ளார் எனத் தெரியாது எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அமலாகத்துறையினர் இரவு வரை அங்கு காத்திருந்துள்ளனர். ஆனால் ஹேமந்த் சோரன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இரவு 10.30 மணி அளவில் அமலாக்கத்துறையினர் அங்கிருந்து வெளியேறுகையில் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு பிஎம்டபிள்யூ காரையும், வீட்டில் இருந்து சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே நாளை (ஜனவரி 31) ராஞ்சியில் உள்ள இல்லத்தில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இணங்கி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக ஹேமந்த் சோரன் தரப்பில் இருந்து அடையாளம் காணப்படாத ஒருவர் அமலாக்கத்துறைக்குத் தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டார் என ஜார்கண்ட் பாஜக் குற்றம்சாட்டியது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், “அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையின் நிலைமையை நான் கண்காணித்து வருகின்றேன். ஆளுநராக என்னுடைய கடைமையை நான் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹேமந்த் சோரனை குறிவைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதாக குற்றம்சாட்டி ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சித் தொண்டர்கள் ராஞ்சியில் பேரணியை நடத்தினர். மேலும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் சட்ட விரோத சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் முதலமைச்சர் இல்லம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளார், அவரது மனைவி ஜார்கண்ட் முதலமைச்சராக்கப்பட உள்ளார் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அவரது X சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்குப் பயந்து, தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை ராஞ்சி அழைத்துள்ளார். அவரது மனைவி கல்பனா சோரனை முதலமைச்சராக்கத் திட்டமிட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் தனிப்பட்ட வேலை காரணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் ஜனவரி 31இல் விசாரணையை எதிர்கொள்வார் என ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் பொதுச்செயலாளர் சுப்ரியா பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2024 பட்ஜெட்: அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை

Last Updated :Jan 30, 2024, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details