தமிழ்நாடு

tamil nadu

காட்டு யானை தாக்கி மாவோயிஸ்ட் படுகாயம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 2:13 PM IST

Maoist attacked by Elephant in Kerala: கண்ணூரில் காட்டு யானை தாக்கி பலத்த காயமடைந்த மாவோயிஸ்ட் குழு உறுப்பினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ள நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Maoist committee member seriously injured in wild elephant attack
காட்டு யானை தாக்குதலில் மாவோயிஸ்ட் குழு உறுப்பினர் பலத்த காயம்

கண்ணூர் (கேரளா):கண்ணூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த மாவோயிஸ்ட், மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ள நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கண்ணூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், மாவோயிஸ்ட் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் சுரேஷ் (48) என்பவருக்கு இடது கால் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த அனைவரும் காட்டு யானைத் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில், நேற்று (பிப்.17) மாலை 6.30 மணியளவில் சுரேஷை ஆயுதம் ஏந்திய 5 மாவோயிஸ்டுகள், பையாவூர் சித்தாரி காலனிக்கு அழைத்து வந்துள்ளனர். கால் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை கம்பளி போர்த்தியவாறு மின்கம்பம் அருகே அமர வைத்த அவர்கள், சுரேஷின் குடும்பத்தாரைச் சந்தித்து அவரின் நிலை குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் உணவுப் பொருட்களை அங்கிருந்த வீடுகளில் இருந்து பெற்றுக் கொண்டு அவர்கள் திரும்பியுள்ளனர். இதையடுத்து, குடும்பத்தினர் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த பையாவூர் பஞ்சாயத்து தலைவர் சாஜூ சேவியர் மற்றும் அப்பகுதியினர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலைப் பெற்ற பையாவூர் போலீசார், சுரேஷை அங்கிருந்து அழைத்து வர ஆம்புலன்ஸை அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அவரை போலீசார் அனுப்பிய ஆம்புலன்சில் ஏற்றி நான்கு கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்த நிலையில், நான்கு கிலோ மீட்டர் தொலைவில் காத்திருந்த போலீசாரிடம் சுரேஷ் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பையாவூர் பஞ்சாயத்து தலைவர் சாஜூ சேவியர் கூறுகையில், "சுரேஷ் பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் செயல்பாட்டாளராக இருப்பதாகவும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவரை தற்போது திருப்பி அனுப்பியுள்ளதாகவும் கூறினார். சுரேஷ் குறித்த தகவல் தெரிந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் அவர்கள் கூறியது போலவே, நான்கு கி.மீ தொலைவில் சுரேஷை போலீசாரிடம் ஒப்படைத்தோம்.

வரம்புகள் காரணமாக போலீசார் இங்கு வரவில்லை. மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் வந்தால், வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், நான்கு கி.மீ தொலைவில் போலீசார் காத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து அவர், கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்" எனக் கூறினார்.

தண்டர்போல்ட் படை (Thunderbolt Force) உள்ளிட்ட ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் சுரேஷ் கண்ணூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையிலான பெரும் போலீஸ் படை, இரவிலேயே மருத்துவமனைக்குச் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், தற்போது சிறப்பு பாதுகாப்புடன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், யானை தாக்கியதில் காயமடைந்த மாவோயிஸ்ட் குழு உறுப்பினர் சுரேஷ் (48), ஊபா (சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்) குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவையில் நடந்த காவல்துறை போட்டிகளில் ஊக்க மருந்து? சங்கர் ஜிவால் கலந்து கொண்ட விழாவில் கழிப்பறையில் ஊசிகள்!

ABOUT THE AUTHOR

...view details