தமிழ்நாடு

tamil nadu

ஓட்டுநர் இல்லாமல் 78 கி.மீ வரை ஓடிய சரக்கு ரயில்.. ரயில்வே துறையினர் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 2:38 PM IST

Updated : Feb 25, 2024, 4:03 PM IST

Goods Train Run Without Diver: ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து ஓட்டுநர் இல்லாமல் சுமார் 78 கி.மீ தூரம் வரை பயணித்த சரக்கு ரயிலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Goods Train Run Without Driver
ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்

ஹோஷியார்பூர் (பஞ்சாப்):ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து, இன்று (பிப்.25) காலை இன்ஜின் டிரைவர் இல்லாமல் சரக்கு ரயில் (14806R) புறப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில் இயங்கியதற்கு, ரயிலை ஓட்டி வந்த டிரைவர் இன்ஜினை ஆஃப் செய்யாமலும், ஹேண்ட் பிரேக் போடாமலும் ரயிலில் இருந்து இறங்கியதே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கதுவா ரயில் நிலைய அதிகாரிகள் சுதாரிப்பதற்கு முன்னரே, சரிவு காரணமாக சரக்கு ரயில் பதான்கோட் நோக்கி ஓடத் துவங்கியுள்ளது. எவ்வளவு முயற்சி செய்தும், கதுவா ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்த முடியவில்லை. இதையடுத்து, சிறுது நேரத்திலேயே சரக்கு ரயில் வேகமாக ஓடத் துவங்கியுள்ளது. அதாவது மணிக்கு 80 கி.மீ வேகத்தை சரக்கு ரயில் எட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலை அடுத்து, உடனடியாக கதுவா ரயில் நிலைய அதிகாரிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள சுஜன்பூர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த, அங்குள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அங்கும் ரயிலை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்து, சரக்கு ரயில் சுஜன்பூர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றுள்ளது.

இருப்பினும் முயற்சி தொடர்ந்த நிலையில், பதான்கோட் கான்ட், கன்ட்ரோடி, பங்களா, மிர்தல், முகேரியன் ஆகிய இடங்களில் சரக்கு ரயிலை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, சரக்கு ரயிலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியதை அடுத்து, கதுவாவில் இருந்து சுமார் 78 கி.மீ தூரம் வரை பயணித்த சரக்கு ரயில், பஞ்சாப்பின் கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஜம்மு ரயில்வே கோட்ட மேலாளர் கூறுகையில், "தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ரயிலில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணை எதிர்வரும் காலங்களில் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கும். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க, பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்துதல், ரயில் பிரேக் மற்றும் சிக்னல் அமைப்புகளை உறுதி செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து இன்ஜின் டிரைவர் இல்லாமல் சுமார் 78 கி.மீ தூரம் வரை பயணித்த சரக்கு ரயிலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உபி டிராக்டர் விபத்து: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு! விபத்துக்கு இதுதான் காரணமா?

Last Updated :Feb 25, 2024, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details