தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் விவசாயிகள் 4ம் கட்ட பேச்சுவார்த்தை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 12:42 PM IST

Kisan Andolan: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் போராடிவரும் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Kisan Andolan Farmers Protest
விவசாயிகள் போராட்டம்

சத்தீஸ்கர்: குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் (MSP) உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைக்களை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஆறாவது நாளாக இன்றும் (பிப்.18) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் டெல்லியை நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகள் அமைப்பின் தலைவர்களுடன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியது. இந்நிலையில், சத்தீஸ்கரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா போன்ற விவசாயிகள் தலைவர்கள், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் மாலை 6 மணிக்கு சந்தித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடர்ந்து பேரணி நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. பஞ்சாப்-ஹரியானா மாநிலத்தின் எல்லைப்பகுதியான ஷம்புவில் விவசாயிகள் தற்போது உள்ளனர். முன்னதாக, மூன்று கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே நடக்க உள்ள நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் இதற்குத் தீர்வு கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் குறிப்பாக, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து போராட்டக்காரர்கள் மீண்டும் வலியுறுத்த உள்ளனர். முந்தைய கூட்டங்களில் இக்குறிப்பிட்ட கோரிக்கைகளை மட்டும் அரசு தரப்பில் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு கிடைக்காத நிலையில், ஷம்புவில் இருந்து பேரணியாக செல்வதாக விவசாயிகள் உறுதியாக உள்ளதால், கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டும், பிளாஸ்டிக் தோட்டாக்களைக் கொண்டும் தடுக்க பாதுகாப்பு படையினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிப்.8, 12, 15 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காத நிலையில், முதலாவது மற்றும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிப்.15-ல் பஞ்சாப் சன்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) அமைப்பினர் மொஹாலி மாவட்டத்தில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராடியதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாகர், முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், கேவல் தில்லான் ஆகியோரின் வீடுகளின் முன்பு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

ஹரியானா விவசாயிகளும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாரதிய கிசான் யூனியன், கிசான்-காப் பஞ்சாயத்து உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு; மார்ச் 16-இல் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details