ETV Bharat / sukhibhava

மக்களை அச்சுறுத்தும் மழை மற்றும் குளிர்கால வைரஸ்: RSV-யை எதிர்கொள்வது எப்படி?

author img

By

Published : Jul 27, 2023, 4:06 PM IST

சுவாச நுண்குழல் அழற்சி நோய் (RSV) இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நோய்த் தொற்றுகள் மற்றும் அதற்கான சிகிச்சை வழிமுறைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் RSV எனும் சுவாச நுண்குழல் அழற்சி வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் 5 வயதிற்குக் குறைவான குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்ட நபர்களைத் தாக்கும் இந்த வைரஸ் மிக மோசமான உடல் நிலைப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும்; உலக அளவில் 2020ஆம் ஆண்டு ஆய்வின் படி 40 மில்லியன் மக்கள் உயிரிழந்திருப்பதாகவும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RSV என்றால் என்ன? RSV (Respiratory Syncytial Virus) என்பது சுவாச நுண்குழல் அழற்சி வைரஸைக் குறிக்கிறது. சுவாச தொற்று நோயாக உள்ள இந்த RSV பொதுவாக காய்ச்சல், சளி, இருமல், பசியின்மை மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சில அறிகுறிகளுடன் தென்படும். இது சுவாசப்பாதையில் தொற்று நோயை உருவாக்கும். மேலும் RSV-யால் பாதிக்கப்பட்ட நபருக்குக் குளிர் அதிகமாகத் தோன்றலாம். இந்த RSV தொற்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெரியவர்கள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது.

ஆனால் குழந்தைகள் RSV-யால் பாதிக்கப்படும்போது நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற கடுமையான சுவாச பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும், இதனால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் ஒவ்வாமை அபாயமும் ஏற்படலாம்.

தேசிய மருத்துவ ஆய்வக அறிக்கை; இந்தியாவில் பொதுவாக RSV தொற்றின் அபாயம் மழைக்காலம் தொடங்கி குளிர்காலம் கடைசி வரை நீடிக்கலாம். அதாவது ஜூன் மாதம் தொடங்கி பிப்ரவரி ஆரம்பம் வரை இருக்கலாம் என, தேசிய மருத்துவ ஆய்வகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவில் உள்ள 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் மத்தியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில் 5 வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு 2.1% முதல் 62.4% வரை RSV பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதற்கும் மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் மத்தியில் ஒப்பிடும்போது இது மாறுபட்ட விகிதத்தில் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2020 கணக்கெடுப்பின்படி உலக அளவில் குறைந்த பொருளாதாரத்தோடு போராடும் நாடுகளில் வாழும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில், RSV தொற்றின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை RSV தடுப்பூசியின் இருப்பு முக்கியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RSV யாரை அதிகம் பாதிக்கும்? கரோனா வைரஸ் போன்று குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் RSV பாதிக்கும். ஆனால், 6 மாதத்திற்கும்கீழ் உள்ள குழந்தைகள் சர்க்கரை நோய், ஆஸ்துமா நோய் உள்ளிட்ட நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருபவர்கள் உள்ளிட்டோரை RSV கடுமையாகப் பாதிக்கும்.

அதாவது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்கும் அளவுக்கு அதன் தாக்கம் கடுமையாக இருக்கும். குறிப்பாக RSV-யால் பாதிக்கப்பட்ட குழந்தையோ அல்லது நபரோ மூச்சுத் திணறல் காரணமாக பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள நபர்களும் இந்த RSV-க்கு பாதிக்கப்படலாம்.

RSV-க்கான தடுப்பூசி : இதற்கான முதல் தடுப்பூசியாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அரெக்ஸ்வி (Arexvy) என்னும் மருந்தினை அங்கீகரித்துள்ளது. இந்த தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் அமெரிக்காவில் RSV-யால் 65க்கும் மேற்பட்ட நபர்களின் உயிரிழப்பு அதிகம் இருப்பதால் அந்நாட்டு அரசாங்கம் Arexvy பரிந்துரைத்துள்ளது.

ஆனால், RSV-யின் தாக்கம் அதிகம் உள்ள ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதுவரை RSV-க்கான தடுப்பூசி முதற்கட்ட ஆராய்ச்சியில்தான் இருக்கிறது. ஆனால், அங்கு பாலிவிசுமாப் என்ற தடுப்பு மருந்து மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தையின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, கர்ப்பிணிகளுக்கு இந்த பாலிவிசுமாப் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால், இதன் விலை இரட்டிப்பாக உள்ளதால் அனைத்து மக்களுக்கும் வழங்க முடியாத நிலையும் இருந்து வருகிறது.

மேலும், பொதுவாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் RSV-யைக் கட்டுப்படுத்த ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமே மக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த தடுப்பூசிக்கான விலை அதிகம் இருப்பதால் மக்களுக்கு அதை எளிமையாக கொண்டு சேர்க்கும் நிலையில் பல நாடுகளும் போராடி வருகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டின் ஆய்வின் படி உலக அளவில் RSV-யால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 40 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Source: National center for biotechnology information)

RSV-யில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கரோனா பெரும் தொற்றின்போது மக்கள் எப்படிப்பட்ட நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினார்களோ அதே போன்ற நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் RSV-யில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, நோய் வாய்ப்பட்டுள்ளவர்களிடம் இருந்து விலகி இருப்பது, பள்ளிகளில் குழந்தைகளை முறையாகப் பராமரிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் குளிர், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள கல்லறைகளை இடமாற்றம் செய்யும் விவகாரம் - தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.