ETV Bharat / sukhibhava

நீரிழிவு நோய் பார்வை திறனை பாதிக்குமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 4:23 PM IST

நீரிழிவு நோய் இதயம், சிறுநீரகத்தை பாதிப்பதைப் போல கண்களையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உலகில் காணப்படும் பார்வைத்திறன் இழப்பிற்கான காரணங்களில் 2.5 சதவீதத்திற்கும் அதிகமாக நீரிழிவு சார்ந்த நோயினால் விழித்திரை அழிவு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நீரிழிவு நோய் பார்வை திறனை பாதிக்குமா
நீரிழிவு நோய் பார்வை திறனை பாதிக்குமா

சென்னை: உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் “நீரிழிவு சிகிச்சை பராமரிப்புக்கு அணுகுவசதி” (Access to diabetes care) என்பது இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருளாக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. நீரிழிவு நோயால் அதிக அளவில் பாதிக்கப்படும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

உலகளவில் ஏறக்குறைய 420 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாகவும், அவர்களில் 90 மில்லியன் நபர்களுக்கு இந்த நோய் சார்ந்த விழித்திரை அழிவு (ரெட்டினோபதி) நோய் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் காணப்படும் பார்வைத்திறனிழப்பு பாதிப்புகளில் 2.5%-க்கும் அதிகமானவை நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோயினால் ஏற்படுகிறது. இந்நிலையில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழித்திரை அழிவு நோய் குறித்து சென்னை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பொது கண் மருத்துவவியலின் முதுநிலை ஆலோசகரும் கண்புரை அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் திரிவேணி விளக்கம் அளித்துள்ளார்.

நீரிழிவு நோய் பார்வை திறனை பாதிக்குமா
நீரிழிவு நோய் பார்வை திறனை பாதிக்குமா

நீரிழிவு நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

நீரிழிவு நிலை அல்லது அதற்கான இடர்-வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று அறிய குறிப்பிட்ட கால அளவுகளில் ஸ்கிரீனிங் சோதனைகளை செய்து கொள்வது அவசியம். இது ஆரம்ப நிலையிலேயே பாதிப்புகளை கண்டறிந்து, நீரிழிவு வராமல் தடுப்பதற்கு உதவும் அல்லது உருவாகியிருக்கும் நீரிழிவு நிலையை திறம்பட நிர்வகிக்க உதவும்.

குறிப்பிட்ட சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் அல்லது ஆரோக்கியமான உணவுமுறைகளின் மூலம் வகை 2 நீரிழிவு வராமல் தடுக்க முடியும், அல்லது அது ஏற்படும் காலத்தை தாமதிக்கச் செய்யமுடியும் என டாக்டர் திரிவேணி கூறியுள்ளார்.

விழித்திரை அழிவு நோய் பற்றி?

விழித்திரை அழிவு (ரெட்டினோபதி) நோய் என்பது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை பாதிக்கும் ஒரு வகை நோய். 2020 ஆம் ஆண்டில் நீரிழிவு நிலையில் கண் கோளாறுகளின் தொகுப்பு (SPEED) என்ற ஒரு ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகளுள் சுமார் 32% நபர்களுக்கு நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 80 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு இருப்பதால் இதன் படி 25 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் இருக்க வேண்டும் என கூறப்படிகிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகளுள் பெரும்பான்மையானவர்கள் கண் பரிசோதனைகளுக்கு செல்வதில்லை.

ஏனெனில், இதயம் அல்லது சிறுநீரகத்தை பாதிப்பதைப் போல கண்களையும் நீரிழிவு பாதிக்கும் என்ற விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. அத்துடன், ஆரம்ப நிலையில் விழித்திரை அழிவு நோயில் அதற்கான அறிகுறிகள் தென்படாமல் இருக்கக்கூடும்.

விழித்திரை அழிவு நோய் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

  • நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு பாதிப்பு இருக்கிறதா என்று அறிய வகை 1 நீரிழிவு நோயாளிகள் (இளவயது நீரிழிவு நோயாளிகள்), நீரிழிவு நிலை இருப்பது அறியப்பட்டதின் ஐந்தாவது ஆண்டிலிருந்து கண் பரிசோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்.
  • வகை 2 நீரிழிவு நோயாளிகளும், நீரிழிவு உறுதிசெய்யப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக கண் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.
  • இந்த இரு வகை நீரிழிவு நோயாளிகளும், கண் தொடர்பான பிரச்சனைகள் எழும்போது உடனடியாக கண் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.
  • விழித்திரை மற்றும் விழித்திரையின் மையப்பகுதி மீதான ஒரு விரிவான கண் பரிசோதனையின் வழியாக நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் இருப்பதை கண்டறிய இயலும்.

விழித்திரை அழிவால் ஏற்படும் பாதிப்புகள்?

  • மங்கலான பார்வை
  • இருட்டான திட்டுகள் அல்லது சரம் மிதப்பது போன்ற அறிகுறி
  • கண்களில் இரத்த நாளங்களில் இயல்புக்கு மாறான வளர்ச்சி
  • உள்ளார்ந்த இரத்தக்கசிவு
  • திரவ சுரப்பை அடைப்பு
  • விழித்திரையையும், கண் நரம்புகளையும் சேதப்படுத்துகிறது
  • சில நேரங்களில் விழித்திரையையே இடம்பெயரச் செய்கிறது

விழித்திரை அழிவுக்கான சிகிச்சைகள்?

  • லேசர் அறுவைசிகிச்சை
  • கசிவுள்ள இரத்த நாளங்களை அடைத்தல்
  • கண் அழற்சியை குறைக்க கண்களுக்குள் ஊசி மூலம் மருந்துகளை செலுத்துதல்
  • கண்களின் பின்புறத்தில் ஜெல் போன்ற திரவத்தை அகற்றவும்
  • விழித்திரை விலகி இருப்பதை சரிசெய்வதற்கான அறுவைசெயல்முறை
  • ஆகியவை விழித்திரை அழிவு நோய்க்கான சிகிச்சைகளுள் உள்ளடங்கும்.

நீரிழிவு நோயாளிகளது பார்வைத்திறனை பாதுகாக்க வழிகள்?

  • இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைப்பது
  • உடல் எடையை குறைப்பது
  • சமச்சீரான உணவை உட்கொள்வது
  • தவறாமல் உடற்பயிற்சி செய்வது
  • மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழ்வது

போன்றவை நீரிழிவு நோயாளிகளது பார்வைத்திறனை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்வதில் பெரும் பங்காற்றமுடியும், என டாக்டர் திரிவேணி கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் உயிர்களை பலிவாங்குகிற நீரிழிவு, உலகளவில் உயிரிழப்புக்கான முன்னணி காரணமாக இருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் நீரிழிவு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதன் மக்கள் தொகையில் சுமார் 17% நபர்கள் நீரிழிவு நோயாளிகளாக இருக்கின்றனர்.

இது 2030ம் ஆண்டுக்குள் 19% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை 2045ம் ஆண்டுக்குள் 134 மில்லியனாக அதிகரிக்கும் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் ஆய்வறிக்கையின் மதிப்பீடு தெரிவிக்கிறது. 2023ம் ஆண்டின் உலக நீரிழிவு தினம் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்படும் நிலையில் “நீரிழிவு சிகிச்சை பராமரிப்புக்கு அணுகுவசதி” என்பது இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருளாக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு சென்னையில் கண்கள் தொடர்பான இலவச ஆலோசனை நிகழ்வை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை திட்டமிட்டு நடத்தி வருகிறது.

அத்துடன், அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்கு வழக்கமான கட்டணத்தில் 50% தள்ளுபடியுடன் சிறப்பு கட்டணத்தில் இம்மருத்துவமனை மருத்துவ ஆலோசனையை வழங்குகிறது.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளின் சருமத்திலும் ஏற்படும் வறட்சி.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.