ETV Bharat / state

சரிந்த பட்டாசு உற்பத்தி: தீபாவளியில் பட்டாசு பரிசு பெட்டி விற்பனை வீழ்ச்சி!

author img

By

Published : Nov 8, 2020, 2:04 PM IST

Updated : Nov 9, 2020, 6:12 AM IST

விருதுநகர்: இந்தாண்டு பட்டாசு உற்பத்தி குறைந்ததால், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகத் தீபாவளியில் மட்டும் விற்கப்படும் பட்டாசு பரிசு பெட்டிகளின் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது.

பட்டாசு பரிசு பெட்டி
பட்டாசு பரிசு பெட்டி

தீபாவளிப் பண்டிகை நாளன்று வீட்டிற்கு வரும் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு இனிப்புப் பண்டங்களுடன் பட்டாசு பரிசு பெட்டியும் கொடுக்கும் கலாசாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. பெரிய வணிக நிறுவனங்களும் தங்களுடைய தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸுடன் பட்டாசு பரிசு பெட்டியும் கொடுத்து ஊக்குவிக்கிறது.

இதற்கான அனைத்து இறக்குமதியும் சிவகாசியில் இருந்தே பெறப்படும். இதைத் தவிர பண்டிகையையொட்டி, துணி வாங்குவதற்காக வரும் வாடிக்கையாளர்களுக்கு, ஜவுளிக் கடைகள் 'பட்டாசு பரிசு பெட்டி' வழங்குவது வழக்கமான ஒன்று. பட்டாசு பரிசு பெட்டியின் சிறப்பே அதில் சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைத்து வயதினருக்கும் ஏற்ற பட்டாசுகள் இருக்கும். இந்தப் பரிசு பெட்டி 150 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வகைகளில் பட்டாசு கடைகளில் கிடைக்கின்றன.

பட்டாசுக்கு பெயர் போன விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தான் தீபாவளி பண்டிகைக்கு விதவிதமான பட்டாசு பரிசு பெட்டி தயாரிக்கப்படும். இந்தாண்டு தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி மந்தமான நிலையிலேயே நடைபெற்று வருகிறது.

உற்பத்தி மட்டுமில்லாமல் விற்பனையும் சரிந்துள்ளது. சீன பட்டாசு ஊடுருவல், ஜிஎஸ்டி வரி, பட்டாசு வெடிக்கத் தடை என பட்டாசு விற்பனை நெருக்கடியான நிலையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரோனாவால் முடங்கியிருந்த 50 நாள்கள் பட்டாசு உற்பத்திக்கு தடைக்கல்லாக நின்றது. ஆண்டு முழுக்க பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டாலும் தீபாவளி விற்பனைதான், இத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம்.

நடப்பாண்டு விற்பனை குறைந்ததற்கு கரோனா அச்சம் காரணமாக, பொதுமக்கள் வீடுகளில் இருப்பதும் ஒரு காரணம் எனத் தெரிவிக்கும் பட்டாசு பரிசு பெட்டி உற்பத்தியாளர் சந்தோஷ் குமார், இதனால் உற்பத்தியும் குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். பட்டாசு வாங்கும் வாடிக்கையாளரைப் பொறுத்துதான் பரிசு பெட்டி தயாரிப்பும் இருக்கும் என சந்தோஷ் குமார் தெரிவிக்கிறார்.

காலம் மாறிப் போச்சு:

'கரோனா காலத்தில் பெரும்பாலானோர் பணப் பரிமாற்றத்தையும், நேரில் வந்து பொருள்களை வாங்குவதையும் தவிர்க்கின்றனர். இதன் காரணமாக விற்பனை குறையாமல் இருக்க இணைய வழி ஆர்டரை பட்டாசு பரிசு பெட்டி விற்பனையகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த மாற்று விற்பனை முறையிலும் பட்டாசு பரிசு பெட்டிக்கான ஆர்டர்கள் வருகின்றன. போன் ஆர்டர்களிலும் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு வகை மற்றும் விலைப் பட்டியலை எளிதாக விளக்க முடிகிறது' என கள நிலவரத்தைக் கூறினார், பட்டாசு பரிசு பெட்டி உற்பத்தியாளர் சந்தோஷ் குமார்.

ஆர்டரும் குறைவு; உற்பத்தியும் குறைவு எனக்கூறும் பட்டாசு விற்பனையாளர் காளீஸ்வரி, இதனால் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பகுதி நேரமாக வேலை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என வருத்தம் தோய்ந்தக் குரலில் தெரிவித்தார்.

அதேபோல் வழக்கமாக பட்டாசுகளின் சில்லறை விற்பனையை விட பரிசு பெட்டிகளின் விற்பனை அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்த அவர், கரோனா பொதுமுடக்கம் அதை தலைகீழாக மாற்றியுள்ளது என்கிறார்.

தீபாவளியில் பட்டாசு பரிசு பெட்டி விற்பனை வீழ்ச்சி!

ஆண்டுக்கொரு முறை பரபரப்பாக நடக்கும் விற்பனைக்காக ஆண்டு முழுவதும் வேலை செய்யும் பட்டாசு ஊழியர்களுக்கு இது மிகப் பெரிய இழப்பாகும்.

Last Updated : Nov 9, 2020, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.