ETV Bharat / state

விருதுநகரில் பழமையான அரிய சித்த மருத்துவச் சுவடிகள் கண்டுபிடிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 8:37 PM IST

Updated : Oct 25, 2023, 9:23 PM IST

Ancient Palm leaf manuscripts discovered in Virudhunagar
விருதுநகரில் பழமையான அரிய சித்த மருத்துவச் சுவடிகள் கண்டுபிடிப்பு!

Virudhunagar News:விருதுநகரில் மிகப் பழமை வாய்ந்த அரிய சித்த மருத்துவச் சுவடிகளை, சுவடியியல் அறிஞர் தாமரைப்பாண்டியன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

விருதுநகர்: தமிழர்கள் தங்கள் பழம்பெருமை சார்ந்த செய்திகளை பனை ஓலைகளில் எழுதி வைத்து பாதுகாத்து வந்தனர். அவ்வாறு எழுதி வைத்த சுவடிகளே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நீதி நூற்கள் உள்ளிட்ட பக்தி இலக்கிய நூல்களாக நம் கைகளில் கிடைத்துள்ளன.

மேலும் சித்த மருத்துவம், கணிதம், சோதிடம், வானியல், நிகண்டு மந்திரம், ஜாலம், ஓகம், ஆவணம் ஆகிய சுவடிகளும் நூல் வடிவம் பெற்றுள்ளன. இவ்வாறு நூல் வடிவம் பெற்றுள்ள சுவடிகள் மூலம் தமிழரின் தொன்மையான வரலாறு, பண்பாடு, நாகரீகம், வானியல் அறிவு, மருத்துவத்திறன், சோதிட கணிப்பு, உடலியல் காப்பு, போர் முறை, மொழி ஆளுமை உள்ளிட்ட பல பழம் பெருமைகளை அறிந்து வியக்க முடிகிறது.

தமிழகத்தில் நிறுவனம், ஆய்வு மையம், கல்லூரி, பல்கலைக்கழகம், நூலகம், அரசு பாதுகாப்பகம், ஆவண காப்பகம், தனிநபர் பாதுகாப்பகம் ஆகிய இடங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கல்கத்தா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களிலும் லட்சக்கணக்கான தமிழ்ச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அயல்நாடுகளிலும் லட்சக்கணக்கான தமிழ்ச் சுவடிகள் உள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் திரட்டப்படாத நிலையில் சில லட்சம் சுவடிகள் உள்ளன. ஆனால், இன்றைய காலத்தில் கள ஆய்வு செய்து சுவடிகளைத் திரட்டி சேகரிப்பது முற்றிலும் இல்லாமல் போயுள்ளது.

இந்நிலையில் சுவடியியல் அறிஞர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் என்பவர் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்து கள ஆய்வின் மூலம் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டி சேகரித்து பாதுகாப்பதோடு நூலாக்கம் செய்யும் பணியையும் செய்து வருகிறார். இவர் 62 தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனிப்பட்ட முறையில் 100-க்கும் அதிகமான சுவடிகளைத் திரட்டி சேகரித்துள்ளார். இந்நிலையில் இன்று (அக்.25) கள ஆய்வு செய்தபோது, அரிய 16 தமிழ்ச் சுவடிகளை இவர் கண்டுபிடித்துள்ளார்.

அது குறித்து அவரிடம் கேட்டபோது, “தமிழர்கள் உலகின் தலை சிறந்த அறிவாளிகள். அவர்கள் காலந்தோறும் தங்கள் மரபுகளை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து பாதுகாத்தனர். தமிழர்களின் அறிவு மரபு அதிக அளவில் சுவடி நிலையில் கிடைக்கின்றன.

இன்றைய தலைமுறையினருக்கு சுவடிகளைப் படித்து அறிய தெரியாத நிலை உள்ளதால், சுவடிகள் அழிந்து வருகின்றன. சுவடிகளை நன்கு படிக்கத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் 10-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதனால் இலக்கியம், மருத்துவம், ஆவணம் உள்ளிட்ட பல லட்சம் சுவடிகள் அழிந்து வருகின்றன.

மேலும் திரட்டப்படாத சுவடிகளும் மக்களின் வீடுகளின் பரண்களில் கிடந்து அழிந்து வருகின்றன. எனவே, இன்றைய சூழலில் சுவடிகளைத் திரட்டிப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயத் தேவை ஆகும். இதனைக்கருத்தில் கொண்டு, நான் தமிழகம் முழுவதும் பயணித்து சுவடிகளைச் சேகரித்து வருகிறேன்.

கடந்த 4 நாட்களாக விடுமுறை என்பதால் நெல்லை மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில், விருதுநகரில் வசிக்கும் நளினி ரமேஷ் என்பவர் எனது சுவடித் திரட்டல் பணியினை அறிந்து என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு 'எங்கள் வீட்டில் சில சுவடிகள் உள்ளன. தாங்கள் நேரில் வந்தால் தருகிறோம்' என்றார்.

எனவே, நான் இன்று காலை விருதுநகர் சென்று சுவடிகளைப் பார்வையிட்டேன். மொத்தம் 16 சுவடிகள் இருந்தன. எஸ்.எஸ்.துரைப்பாண்டியன் நாடார் என்பவர் இச்சுவடிகளைத் திரட்டிப் பாதுகாத்து வந்துள்ளார்.

சுவடிகளை ஆய்வு செய்தபோது, அதில் பெரும்பாலும் சித்த மருத்துவ சுவடிகளே இருந்தன. ரோமரிஷி - 500, கயிலாச சட்டைமுனியார் வாத நூல் - 1000, கொங்கன மூர்த்தி அருளிச்செய்த நடுக்காண்டம், பிரம்ம முனிவைத்தியம், அகத்தியர் சவுமியசாகரம், வர்மசூத்திரம், சர நூல், இராமதேவர் நிகண்டு - 510, கட்டு முறைவைத்தியம், வர்ம ஏடு, வைத்திய திரட்டு, சோதிடம், லோக வசியம், அவ்வையார் அருளிச்செய்த வீட்டு நெறிப் பால், நீதிநெறி, சித்த மருத்துவ கலப்பு ஏடுகள் என்ற நிலையில் அரிய ஓலைச்சுவடிகள் இருந்தன.

இச்சுவடிகளை எஸ்.எஸ்.துரைப்பாண்டியன் அவர்களின் மனைவி ராஜேஸ்வரி பாதுகாத்து நூலாக்கம் செய்யுமாறு என்னிடம் வழங்கினார். சுவடிகள் வழங்கிய குடும்பத்தார் அனைவருக்கும் தமிழன்னையின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தாமரைப் பாண்டியன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்.. திக்குமுக்காடிய தாம்பரம்.. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்!

Last Updated :Oct 25, 2023, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.