ETV Bharat / state

’இவங்கதான் என் குடும்பம்; இவங்களே எனக்குப் போதும்’- கரோனாவால் கைவிடப்பட்ட விலங்குகளை அரவணைக்கும் சுனிதா!

author img

By

Published : Jul 16, 2020, 7:21 PM IST

சக மனிதனையே சுமையாகப் பார்க்கும் இந்த நவீன யுகத்தில் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளித்துவரும் சுனிதாவை, ‘கால்நடைகளின் காவலர்’ என்றே சொல்லலாம். சின்ன சின்ன அன்பில்தானே மனிதம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது...

கிறிஸ்டி
கிறிஸ்டி

"உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் வேண்டும்" என்ற பாரதியாரின் கூற்றை தனது வாழ்க்கையில் செயல்படுத்தியுள்ளார், சுனிதா கிறிஸ்டி. விருதுநகர் மாவட்டம், குமாரபுரத்தில் அமைந்திருக்கும் சுனிதாவின் வீட்டுத் தொழுவம்தான், பல ஐந்தறிவு ஜீவன்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் சக மனிதனுக்கு உதவும் மனிதநேயமே நீர்த்துப் போன நிலையில், நிராதரவாக நிற்கும் விலங்குகளைத் தன்னுடைய பிள்ளைகள் போல பாகுபாடில்லாமல் அரவணைத்துப் பாதுகாத்துவருகிறார்.

விலங்குகளையும் பறவைகளையும் தன்னுடைய குடும்பமாகப் பாவிக்கும் மனிதி என்றே சுனிதாவைச் சொல்லலாம். இறைச்சியாகவிருந்த உயிரினங்கள் தொடங்கி விபத்தில் சிக்கித்தவித்த உயிரினங்கள்வரை அனைத்தும், தற்போது இவருடைய தொழுவத்தில் நிம்மதியாக நடமாடுகின்றன. இந்தக் கரோனா காலத்தில் அல்ல, கடந்த 15 ஆண்டுகளாக நிராதரவான விலங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பில் தன்னை அர்ப்பணித்துள்ளார், சுனிதா.

தற்போது இவருடைய தொழுவத்தில் மாடு, ஆடு, குதிரை, எருமை, கழுதை, நாய், பன்றி, கோழி, வான்கோழி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விலங்கினங்களையும், பறவையினங்களையும் உணவு வழங்கி பாதுகாத்துவருகிறார். இத்தனை உயிரினங்களுக்கும் உணவு வழங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல எப்படிச் சமாளிக்கிறீர்கள் எனக் கேட்டோம். அவர் கூறுகையில், “பொருளாதார உதவிகளைச் சமூக வலைதளங்கள் மூலம் பெற்றுக்கொள்கிறேன். பொதுமக்கள் தங்களால் பராமரிக்க முடியாவிட்டாலும், பராமரிக்க முடிகிறவர்களுக்கு உதவுகின்றனர். அவர்களுக்கு நன்றி.

விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராமத்துப் பெண்ணின் கதை

தற்போதைய கரோனா காலத்தில் விலங்குகள் மூலம் கரோனா பரவுவதாகத் தவறாக எண்ணி வீட்டுச் செல்லப் பிராணியான நாய் போன்ற உயிரினங்களைப் பராமரிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதன் மூலம் விலங்குகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். நான் என்னால் இயன்றவரை உயிரினங்களைப் பராமரித்துவருகிறேன். இந்த உயிரினங்களே எனக்குப் போதும், இவர்களே என் குடும்பம்” என்றார்.

சுனிதாவிற்கு 43 வயது ஆகுகிறது, ஆனால் வாயில்லா ஜீவன்களின் நலனுக்காக இப்போதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாளாக களத்தில் நின்று பணியாற்றுகிறார். விலங்குகளையோ, பறவையையோ அது, இது என விளிக்கும் பழக்கம் சுனிதாவுக்கு இல்லை, ’அவங்க, இவங்க’ என மரியாதையாகத்தான் குறிப்பிடுகிறார்.

குழந்தைகளை விலங்குகளோடு பழக அனுமதிக்கும்போது கருணை, பொறுமை போன்ற நற்குணங்களோடு குழந்தைகள் வளருவார்கள் என்றும் சுனிதா அறிவுறுத்துகிறார். சக மனிதனையே சுமையாகப் பார்க்கும் இந்த நவீன யுகத்தில் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளித்துவரும் சுனிதாவை, ‘கால்நடைகளின் காவலர்’ என்றே சொல்லலாம். சின்ன சின்ன அன்பில்தானே மனிதம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.


இதையும் படிங்க: மனிதர்களுக்கு பூட்டு... விலங்குகளுக்கு சுதந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.