ETV Bharat / state

'திமுக அழுகிப்போன தக்காளி; அந்தக் கட்சிக்கு சகுனம் சரியில்லை' - ராஜேந்திர பாலாஜி

author img

By

Published : Dec 8, 2020, 6:06 AM IST

Updated : Dec 8, 2020, 7:02 AM IST

விருதுநகர்: திமுக அழுகிப்போன தக்காளி - கூட்டுக்கும் உதவாது, குழம்புக்கும் உதவாது எனவும் அந்தக் கட்சிக்கு சகுனம் சரியில்லை என்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து மாநில பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கிவைத்தார். அதற்கு முன்னதாக அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

தேர்தல் பரப்புரையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக யாரை அறிவித்தாலும் அவரை இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஊழல் பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை. ஸ்டாலின் தனது சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்தத் தேர்தலிலும் அவர் ஏமாளியாகத்தான் போவார். எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது. ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக 350 கோடி ரூபாயை பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்துள்ளார்.

தற்போது திமுகவுக்குச் சகுனம் சரியில்லை. அதிமுக கைப்படாத ரோஜா அல்ல; கட்சியில் ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனைத் தலைவர்கள் சரிசெய்துவிடுவார்கள்.

திமுக அழுகிப்போன தக்காளி - கூட்டுக்கும் உதவாது, குழம்புக்கும் உதவாது. தமிழ்நாட்டில் புயல் ஏற்பட்டபோது நடவடிக்கை எடுத்தது அதிமுக. வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா நாடகம் போடுற அரசியலை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷில் குமார் மோடி

Last Updated : Dec 8, 2020, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.