ETV Bharat / state

குடிபோதையில் அரசுப்பேருந்தை இயக்கி பயணிகளை அலறவிட்ட ஓட்டுநர் பணியிடை நீக்கம்...

author img

By

Published : Aug 23, 2022, 2:59 PM IST

திருப்பதியில் இருந்து புதுவை செல்லும் அரசுப்பேருந்தை மது அருந்திவிட்டு, இயக்கிய ஓட்டுநர் மீது போக்குவரத்துக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்தைச்சார்ந்த பேருந்து திருப்பதியில் இருந்து வந்தவாசி வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்டது. பேருந்தை திண்டிவனம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணி புரியும் தரணேந்திரன், நடத்துனர் ஹோலிபேஸ் என்பவருடன் இயக்கியுள்ளார்.

இப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
தருணேந்திரனுக்கு சில நிமிடங்களில் மதுபோதை தலைக்கேறியதால், பேருந்தை கண்மூடித்தனமாக இயக்கியுள்ளார்.

இதனால் பேருந்தில் பயணிகள் மிகவும் அச்சத்துடன் பயணித்தனர். இதுபற்றி பயணிகள், நடத்துநரிடம் முறையிட்டும் அவர் கண்டுகொள்ளாததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும், ஓட்டுநர் தரணேந்திரன் குடிபோதையில் தொடர்ந்து வேகமாகப் பேருந்தை இயக்கியுள்ளார்.

இதனால் ஆபத்தை உணர்ந்த நடத்துநர் ஹோலிபேஸ், பேருந்தை வந்தவாசி வரை இயக்கிவந்து பாதுகாப்பாக நிறுத்தினார். அதன்பிறகு பேருந்தை அங்கிருந்து இயக்கவிடாமல் பயணிகள் தடுத்துள்ளனர். உடனடியாக வந்தவாசி போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் டிரைவர் தரணேந்திரனை ஒப்படைத்தனர்.

இதுபற்றி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்களிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனிடையே மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு வந்தவாசியில் இருந்து அந்தப் பேருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. குடிபோதையில் இருந்த டிரைவரிடம் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் தரணேந்திரன் மற்றும் இது பற்றி உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்தது மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக நடத்துநர் ஹோலிபேஸையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்...மனோன்மணியம் பல்கலைகழக புதிய துணைவேந்தர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.