ETV Bharat / state

CBSE Board Exam: 'CORE’க்கு பதில் ‘ELECTIVE' - தனியார் பள்ளி முற்றுகை!

author img

By

Published : Feb 24, 2023, 10:20 AM IST

இன்று தொடங்க உள்ள 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ ஆங்கிலத் தேர்வில், தனியார் பள்ளியின் தவறால் CORE பாடப்பிரிவிக்கு பதிலாக ELECTIVE தேர்வை எழுத பள்ளி நிர்வாகம் கூறியதை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

CBSE Board Exam: 'CORE’க்கு பதில் ‘ELECTIVE' - தனியார் பள்ளி முற்றுகை!
CBSE Board Exam: 'CORE’க்கு பதில் ‘ELECTIVE' - தனியார் பள்ளி முற்றுகை!

இன்று தொடங்க உள்ள 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ ஆங்கிலத் தேர்வில், தனியார் பள்ளியின் தவறால் CORE பாடப்பிரிவிக்கு பதிலாக ELECTIVE தேர்வை எழுத பள்ளி நிர்வாகம் கூறியதை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா

வேலூர்: அரியூரில் தனியார் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 37 மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு இன்று (பிப்.24) காலை 10 மணிக்கு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் 37 மாணவர்களும் ஆங்கிலப்பாடத்தில் ‘CORE’ பிரிவைத் தேர்வு செய்து படித்து வந்தனர்.

ஆனால், இன்று நடைபெற உள்ள தேர்வை ‘ELECTIVE’ பாடப்பிரிவில் தேர்வு எழுதுமாறு ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ளதாகவும், படிக்காத பாடப்பிரிவை மாணவர்கள் எப்படி எழுத முடியும் எனவும் மாணவர்களின் பெற்றோர் நேரில் சென்று கேட்டதற்கு, பள்ளி நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சுமார் 40க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘எங்கள் பிள்ளைகள் தேர்வு செய்த பாடம் ஆங்கிலம் CORE. ஆனால் தற்போது ஆங்கிலம் ELECTIVE பாடத்தை தேர்வெழுத சொல்கிறார்கள்.

படிக்காத பாடத்தை எப்படி மாணவர்களால் தேர்வெழுத முடியும்? பள்ளி நிர்வாகம் சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு கொடுத்த தவறான தகவலால், இந்த தவறு நிகழ்ந்துள்ளது. இதனால் எங்கள் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் இன்று நடைபெறும் தேர்வில் ஆங்கிலம் கோர் வினாத்தாள் கொடுக்க வேண்டும் அல்லது இந்தத் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு வைக்க வேண்டும்’ என கூறினர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த சிபிஎஸ்இ பள்ளிகளின் நகர ஒருங்கிணைப்பாளர் சரவணன், பெற்றோரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய சரவணன், “இது பள்ளி நிர்வாகத்தால் நிகழ்ந்த தவறு. இருந்தபோதும் இதனை சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மாணவர்களை தேர்வெழுத அனுப்புங்கள்.

இன்று ஆங்கிலம் எலெக்டிவ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஜீன் மாதம் அவர்களின் பாடப்பிரிவான ஆங்கிலம் கோர் வினாத்தாள் கொடுத்து துணைத் தேர்வு நடத்தப்படும். இதனால் எந்த விதத்திலும் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தவறுக்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பு. பள்ளி நிர்வாகம் தவறுதலாக விண்ணப்பித்ததால் இந்த தவறு நடைபெற்றுள்ளது. அதற்கு முழு பொறுப்பை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது” என்றார்.

மேலும் இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்ததை அடுத்து, நள்ளிரவு 1 மணிக்கு பெற்றோர் கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக 37 மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பெற்றோர்களே உஷார்.. முறையான அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.