ETV Bharat / state

கருவேப்பிலைக்குள் மறைத்து ஐம்பொன் சிலை கடத்தல்.. வேலூரில் இருவர் சிக்கியது எப்படி?

author img

By

Published : Mar 16, 2023, 11:34 AM IST

வேலூர் அருகே பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை கட்டைப் பையில் கருவேப்பிலைகளுக்கு இடையில் மறைத்து வைத்து கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Aimbon idol was smuggling
கருவேப்பிலைக்குள் மறைத்து ஐம்பொன் சிலை கடத்தல்

வேலூர்: அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார் நேற்று (15.03.2023) இரவு மலைகோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிலர் சிலை கடத்தி விற்க முயல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மலைக்கோடியில் இருந்து பள்ளிகொண்டா செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர் இருசக்கர வாகனத்தில் வந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்தனர்.

பின்னர் அந்த இருவரையும் விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் சாத்துமதுரை அருகே அந்த இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் சந்தேகத்திற்கிடமாக இருந்த கட்டைப் பையை வாங்கி சோதனை செய்த போது, அதில் காய்கறி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலை ஒன்று மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

அந்த சிலையை பறிமுதல் செய்த போலீசார் ஆய்வுக்கு உட்படுத்திய போது திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. அதாவது அந்த சிலை ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பதும், ஒன்றரை அடி உயரமும், ஐந்தரை கிலோ எடையும் கொண்ட அந்த சிலை பல கோடி ரூபாய் விலை மதிப்புடையது என்பதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜ் (43), கண்ணன் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிலையை கடத்தி வந்ததும் அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அரியூர் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தீர்ப்பிற்குப் பிறகு அந்த இரண்டு பேரையும் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சிலை கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் சிலை எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் அரியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடுத்த கடனை கேட்க சினிமா வில்லன் போல் பாஜக பிரமுகர்.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.