ETV Bharat / state

வேலூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; வீட்டை பூட்டிக்கொண்டு மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 9:46 PM IST

Vellore News: வேலூர் அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வீடுகளுக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி

வேலூர் அருகே ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி

வேலூர்: குடியாத்தம் பகுதியில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, நீதிமன்ற உத்தரவின் பெயரில் அகற்றும் பணியில் பொதுப்பணி துறையினரும், வருவாய்த் துறை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியின் போது, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கவுண்டன்ய மகாநதி கரையோரம் உள்ள சுமார் 1280 வீடுகள் சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக வீட்டின் உரிமையாளர்களுக்கு, 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இன்று (செப்.25) வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக, காவல்துறையின் பாதுகாப்பில் ராட்சத இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வந்தனர். அப்போது அந்த தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்கள் வீட்டிற்கு பட்டா இருப்பதாகவும், தாங்கள் வீட்டு வரி கட்டுவதாகவும், நீண்ட காலமாக இங்கு வசித்து வருவதாகவும் கூறி, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண்கள் தங்களின் வீடுகளின் பட்டா நகல்களை கையில் வைத்துக் கொண்டு, தங்களை காலி செய்ய கூறுவது நியாயமா என்று வேதனையுடன் கூறினர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் இடிக்கும் பணியில் ஈடுபட்டதால், வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கட்டடங்கள் அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு, அம்மக்கள் வீடுகளை காலி செய்ய, மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தனை ஆண்டுகளாக தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு காலி செய்ய கூறுவதும், தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்து கட்டிய வீடு தங்களின் கண் முன்பு இடிக்கப்படுவதும் மிகுந்த மனவருத்தம் அளிப்பதாக, அப்பகுதி மக்கள் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னை தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் துணி கடைக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து..ஒரு லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.