ETV Bharat / state

சாதாரண மனிதராக எனது மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன் - நளினி

author img

By

Published : Nov 13, 2022, 9:02 AM IST

சிறைச்சாலை ஒரு நரகம், சாக்கடை, புதைகுழி, சுடுகாடு போல தான். எனது சிறை வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்துள்ளேன் போட்டுக்கொள்ள உடை கூட இல்லாமல் தவித்துள்ளேன். என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான நளினி கூறியுள்ளார்.

நளினி
நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான நளினி இன்று மாலை காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,”விடுதலைக்குப் பிறகும் எனது கணவர் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் நான் வருத்தமாக உள்ளேன். 32 வருடங்கள் சிறையில் கழித்ததால் எங்களுக்கு என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது.

அனைத்து நீதிபதிகளுக்கும் இதற்காக முயற்சித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும், காவல்துறை சிறைத்துறை, பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் எல்லாம் இல்லாவிட்டால் இதைக் கடந்து வந்திருக்க முடியாது. விடுதலை ஆகியிருக்க முடியாது, இதுவரை எந்த வழக்கறிஞருக்கும் ஒரு பைசா கூட நான் கொடுத்தது கிடையாது” என்றார்.

குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து கேட்டதற்கு,”குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இறந்து போன பொதுமக்கள் காவல்துறை என அனைவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா இல்லையா? இதை எப்படி எதிர்கொண்டார்கள் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

விடுதலைக்குப் பிறகு எனது மகள் என்னுடன் பேசினார், அப்பா அம்மா என இருவரும் தனக்குக் கிடைத்து விட்டார்கள் என எனது மகள் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறாள். எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து மனதில் எந்த கஷ்டத்தையும் வைத்துக் கொள்ளாமல் நன்றாக என்ஜாய் பண்ணுங்க அம்மா என சொன்னால். நானும் எனது கணவரும் மகளிடம் செல்ல உள்ளோம்”என்றார்.

தங்கள் விடுதலைக்கு எதிராக சிலர் கருத்து கூறுவது குறித்து கேட்டதற்கு,”எல்லோருமே எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தவறு, எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. மற்றவர்களின் கருத்தையும் உள்வாங்கி அதற்கேற்றது போல் நடந்து கொள்ள வேண்டும்” என கூறினார்.

தங்கள் குற்றம் செய்யவில்லை என நிரூபிக்க மேலும் சட்டப் போராட்டம் தொடர்வீர்களா என கேட்டதற்கு,”செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும் என எனது தலையில் எழுதி உள்ளது என்ன செய்வது. அதேசமயம், மத்திய, மாநில அரசுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஆளுநர் தங்களது விடுதலை தொடர்பாகத் தாமதப்படுத்தியது குறித்து கேட்டதற்கு,”தற்போதைய தமிழக ஆளுநர் காவல் துறையில் இருந்தவர், அவர் துறை சார்ந்த ஏழு பேர் இறந்துவிட்ட நிலையில் அவர் எப்படி எனக்கு விடுதலை கொடுப்பார் என நான் எதிர்பார்க்க முடியும்” என பதிலளித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறித்து கேட்டதற்கு,”32 வருடங்கள் சிறையில் இருந்து விட்டோமே அவர்களுக்குத் திருப்தியாக இல்லையா?”எனக் கூறினார்.

ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா இவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு,”வாய்ப்பே இல்லை சாமி. அவர்களுடைய வழக்கில் தான் நாங்கள் சிறை தண்டனை அனுபவித்தோம், அப்படி இருக்கையில் அவர்களை எப்படிச் சந்திக்க முடியும். மேலும் பிரியங்கா காந்தி என்னை வேலூர் பெண்கள் தனிச்சிறையில் சந்தித்து விட்டுச் சென்ற பிறகு அவர் பத்திரமாகச் செல்ல வேண்டும் என நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டேன்” என கூறினார்.

தான் சிறையில் படித்தது குறித்து அவர் கூறுகையில்,”இதற்கு முன்னால் இருந்த ஐஜி ஒருவர் உதவியோடு தான் நான் படித்தேன் அவர்தான் என்னைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தினார். பல உதவிகளையும் செய்து கொடுத்தார்” எனக் கூறினார்.

சிறை அனுபவம் குறித்து கேட்டதற்கு,”சிறைச்சாலை ஒரு நரகம், சாக்கடை, புதைகுழி, சுடுகாடு போலத் தான். உண்மையிலேயே அப்படித்தான். சிறையிலிருந்தபோது எங்களது விடுதலைக்கான முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். எனது சிறை வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்துள்ளேன் போட்டுக்கொள்ள உடை கூட இல்லாமல் தவித்துள்ளேன். ஒரு ஜெராக்ஸ் எடுக்கக் கூட வசதி இன்றி அவதியுற்றுள்ளேன்.

சிறை வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன், யாராலும் போக முடியாத ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது சிறை தான். மேலும் அங்கு நிதானத்தை, பொறுமையை, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதையும் கற்றுக் கொள்ளலாம் என்னிடம் இல்லாத பலவற்றை அங்கு கற்றுக் கொண்டேன்” என்றார்.

மேலும் எனக்காகக் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் பல வழக்கறிஞர்கள் பணமே வாங்காமல் வாதாடினார்கள். எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு உதவியாக இருப்பேன். என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்” என்றார்.

இவ்வழக்கை விசாரித்த போதும், நீங்கள் சிறையிலிருந்த போதும் உங்களுக்கு ஏதேனும் அச்சம், பயம் இருந்ததா என கேட்டதற்கு,”வழக்கு நடந்த போதும் சரி, சிறையிலிருந்த போதும் சரி, இந்த வழக்குக்காக நான் ஒருபோதும் பயப்படவில்லை. நான் யார்? என்ன என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் நான் பயப்படவில்லை” என்றார்.

மக்கள் உங்களை எப்படி பார்ப்பார்கள் என கேட்டதற்கு,”நான் நானாக இருப்பேன் என்னை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும் தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள்.

நீங்கள் என்னைக் கொலையாளியாகப் பார்க்கிறீர்களா? என்னைப் பார்த்தால் கொலைகாரி போல் தெரிகிறதா? மாற்றுக் கருத்து இருப்பவர்கள் பற்றி எதுவும் சொல்ல முடியாது அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

தங்களுடைய அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது குறித்து கேட்டதற்கு,”சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். ஒரு சாதாரண மனிதராக எனது மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்” எனக் கூறினார்.

10 மாத காலம் பரோல் வழங்கியது குறித்து கேட்டதற்கு,”தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கு விடுதலைக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி. எனக்கு பரோல் கொடுத்த தமிழக அரசுக்கும் நன்றி. இந்த பத்து மாத பரோல் எனக்கு பெரும் உதவியாக இருந்தது. சிறை என்பது ஒரு இருட்டறை அங்கு வெளியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாது. ஒரு சின்ன விஷயத்தைக் கூடச் சொல்ல ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

பரோலில் வந்த பிறகுதான் உச்சநீதிமன்றத்தை எப்படி அணுகுவது என்று தெரிந்து கொண்டேன். அதேபோல இவ்வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரன் உடன் பேச வாய்ப்பு கிடைத்தது அவருடன் கலந்து ஆலோசித்துப் பேசி தான் உச்சநீதிமன்றத்தை அணுகினோம் இதில் எனக்கு பெரும் உதவியாக அவர் இருந்தார். அவரின் உதவியாளும் தற்போது ஆறு பேருக்கு விடுதலை கிடைத்துள்ளது” என்றார்.

சிறையில் நாட்கள் எப்படி கழிந்தது என கேட்டதற்கு,”மத்திய அரசு சிறையில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால் அதை முழுமையாக இவர்களால் செயல்படுத்த முடியவில்லை. அங்கு முடித்த கோர்ஸ்களுக்காக ஒரு சான்றிதழ் கூட வழங்கவில்லை. சிறையிலிருந்த போது ஆன்மீகத்திலும், யோகாவிலும் அதிக நாட்டம் செலுத்தினேன். சிறையிலிருந்த போது நேரமே போகாது” என்றார்.

உங்கள் கணவரைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார் என கேட்டதற்கு,”இந்த விடுதலையை ஒரு மிராக்கிளாகவே எனது கணவர் முருகன் பார்க்கிறார். இன்னும் தாமதம் ஆகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர் சிறப்பு முகாமுக்குச் செல்வது வருத்தம் என தெரிவித்ததற்குக் கவலைப்பட வேண்டாம் நான் திரும்பி வந்து விடுவேன் என எனக்கு ஆறுதல் தெரிவித்தார்” என்றார்.

பேரறிவாளுடன் நீங்கள் தொடர்பு கொண்டீர்களா என கேட்டதற்கு,”பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை முயற்சித்துக் கொண்டே இருந்தோம். அவர் என்னென்ன செய்கிறார் என்பதை நானும் தொடர்ந்து செய்து வந்தேன். அவர் உச்ச நீதிமன்றத்தை நாடிய போதெல்லாம் இது எழுவர் விடுதலையை நோக்கித்தான் செல்கிறது, எழுவர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் விடுதலை என வந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகு தான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தை நாடினோம்” என்றார்.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளதால் அடுத்து என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு,”எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளதால் இங்குள்ள கெங்கையம்மன் கோயிலுக்குப் போகவேண்டும். தீமிதிக்க வேண்டும் எனது மகளுக்குத் துலாம் பாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

மேலும் நீங்கள் அதிகம் படித்து இருப்பதாகவும், ஆகையால் ஒரு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என உங்கள் தாய் கூறியிருந்தார். அரசிடம் இருந்து தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா? கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு,”அப்போது நளினியுடன் இருந்த அவரது சகோதரர் பாக்கியநாதன் கூறுகையில், எனது அக்காவோட விடுதலைக்குப் பிறகு அவருக்குத் தேவையான அனைத்து உதவியையும் தம்பி என்ற முறையில் நான் செய்து கொடுப்பேன்” என்றார்.

தொடர்ந்து இதுகுறித்து நளினி பேசுகையில்,”எனது கணவர் முருகன் அடிக்கடி என்னிடம் கூறுவார், நீ என் மகாராணி நீ யாரிடமும் கையேந்தக் கூடாது, நான் உன்னைப் பார்த்துக் கொள்வேன் என எனது கணவர் கூறியுள்ளார். அவர் உள்ளவரை எனக்குக் கவலை இல்லை” என்றார்.

இவ்வழக்கில் சிறைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் வாழ்வில் என்னவாக ஆகி இருப்பீர்கள் என கேட்டதற்கு,”சிறைக்குச் செல்லாவிடில் எனக்கு அப்போது ஸ்டேடஸ்டிக் வேலை கிடைத்தது. ஏதாவது வேலையிலிருந்து தற்போது பணி ஓய்வு பெற்றிருப்பேன்” என நளினி கூறினார்.

இதையும் படிங்க: 'இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்குப் பாடுபடுவேன்' - ரவிச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.