ETV Bharat / state

சிப்காட் விவகாரம்; வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் விடுதலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 1:49 PM IST

Updated : Nov 22, 2023, 2:07 PM IST

Tiruvannamalai Melma SIPCOT issue: திருவண்ணாமலையில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

சிப்காட் எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட விவசாயிகள் விடுதலை
சிப்காட் எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட விவசாயிகள் விடுதலை

சிப்காட் விவகாரம்; வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் விடுதலை!

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்த வந்தது. இதற்காக மேல்மா, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் 126 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, காவல் துறையினர் தடையை மீறி செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து விவசாயிகள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பேரணியாகப் புறப்பட்டனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகளை போராட்டக்காரர்கள் மீது போலீசார் பதிவு செய்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உள்பட 22 பேரை கடந்த நவம்பர் 4ஆம் தேதி கைது செய்த போலீசார், அவர்களை வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 22 பேரில் 7 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் சதாசிவம், மாசிலாமணி, அண்ணாமலை, பாபு, பாக்யராஜ், பெருமாள், பாலாஜி, சுந்தரமூர்த்தி, ராஜதுரை, வெங்கடேசன், முருகன், விஜயன், திருமலை, துரைராஜ் மற்றும் அன்பழகன் ஆகிய 15 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று 15 விவசாயிகளும் வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். 19 நாட்களுக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையானவர்களை சிறைக்கு வெளிய காத்திருந்த விவசாயிகள், அவர்களை மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் மாசிலாமணி, பாக்கியராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்து, பின்பு முதலமைச்சரால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

பின்னர் விவசாயி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது. அதனை ரத்து செய்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், எங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்றனர். மேலும் இத்திட்டத்தை கைவிடவில்லை என்றால், நாங்கள் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன?

Last Updated : Nov 22, 2023, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.