ETV Bharat / state

The Kerala Story: தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு.. தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை!

author img

By

Published : May 6, 2023, 10:32 AM IST

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கேரளா தடை செய்யும் வரை காத்திருக்க முடியாது, ஆகையால் தமிழ்நாட்டில் உடனடியாக தடை செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை வைத்துள்ளார்.

the kerala story
தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமை தாங்கினார். மேலும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் வணிகர்கள் நலன் சார்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் தவறான அதிகபட்ச வரிவிதிப்பு கொள்கையால் இந்த துறை முழுமையாகவே சீரழிந்துவிட்டது. கரோனா பெருந்தொற்று மற்றும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி இழந்தும் இருப்பதால் இவர்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகிவிட்டது.

இந்த துறையை தக்க வைப்பது மட்டுமல்ல, அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே, ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலமாக பெறும் அதிகபட்ச வரிவிதிப்பை பரிவுடன் பரிசீலித்து மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்ச வரிஅமைப்பாக மாற்றி அமைத்து, நாட்டின் 60 சதவீதத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை செழுமைப்படுத்தித் தரும்படி இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதோடு, அந்த துறையை பாதுகாக்க புதிய வங்கிக் கடன்களை எளிய முறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியது, “தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கேரளா மாநிலம் தடை செய்யும் வரை காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு இந்தப் படத்தை திரையிடுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படும் அனைத்து திரையரங்கம் முன்பும் கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் தொடர்ந்து அரசியலில், தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார், இதை கண்டிக்கிறோம். உடனடியாக தமிழ்நாடு ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவுடன் இணைந்து அரசியல் பேச தொடங்கலாம். அதைத் தவிர ஆளுநர் பதவியில் இருந்து பேசுவது அநாகரிகம் அற்ற செயல் ஆகும்.

ஆளுநர் இல்லாத தமிழ்நாட்டை நோக்கி தமிழ்நாட்டு மக்கள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருடைய திட்டங்களுக்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது.

ஆகையால் அரசு அதிகாரிகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மக்களுகான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கையை வைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் சிறு குறு வணிகர் மீது அடாவடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எங்கள் கட்சி சார்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் உரிய அறிவிப்பு நிச்சயமாக அறிவிக்கப்படும். குறிப்பாக பாஜகவை தமிழ்நாட்டில் நுழையவிடாமல் இருப்பதற்காக எந்த திட்டங்களையும், நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்” என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிர்ப்பு - இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.