ETV Bharat / state

செறிவூட்டப்பட்ட, சாதாரண அரிசி என தனித்தனி வீடியோ பதிவிட்டு மக்களை குழப்புகின்றனர்: ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Feb 19, 2023, 9:22 AM IST

செறிவூட்டப்பட்ட அரிசியையும், சாதாரண அரிசியையும் தனித்தனியாக வீடியோ பதிவிட்டு மக்களை குழப்புகின்றனர். அதில் உண்மை இல்லை என கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

செறிவூட்டப்பட்ட அரிசி, சாதாரண அரிசி என தனித்தனி வீடியோ பதிவிட்டு மக்களை குழப்புகின்றனர்: ராதாகிருஷ்ணன்

திருச்சி: சுப்ரமணியபுரம் பகுதி ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தை உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன் பின் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, "தமிழ்நாட்டில் முதல்முறையாக, பிப். 17ஆம் தேதி, ஒரே நாளில் 2,077 நேரடி கொள்முதல் நிலையங்களில் 51,307 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 - 22-ல் கூட்டுறவுத் துறை வாயிலாக, 14 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு 10,892 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப். 17ஆம் தேதி வரை, 15 லட்சத்து 59ஆயிரம் விவசாயிகளுக்கு நிர்ணயித்த இலக்கை கடந்து 12,010 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2.18 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு 1,486.67 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் மட்டும் 2.65 லட்சம் விவசாயிகளுக்கு, 1,709.44 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது'' எனக் கூறினார். ’’கூட்டுறவுத்துறையில் முதல் முறையாக, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் கால்நடைகள் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த ஆண்டு, 2.48 லட்சம் கால்நடை வளர்ப்போருக்கு 1,130 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

25 ஆயிரத்து 520 நிரந்தர ரேஷன் கடைகள் உட்பட 35 ஆயிரத்து 889 ரேஷன் கடைகளில், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் மட்டுமின்றி, மாநில திட்டத்திலும் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கூட்டுறவுத் துறை தயாரிப்புகளை விநியோகம் செய்து வருகிறோம். தற்போது 13.56 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்னும் 90 ஆயிரம் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார்.

’’அண்ணா அந்தியோதயா திட்டத்தில் முறைகேடாக அரிசி பெற்ற, 2.7 லட்சம் கார்டுதாரர்கள் கண்டறியப்பட்டு, தகுதியானவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில், நேரடி கொள்முதல் நிலையப் பணியாளர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரபாகரன் தலைமையில், 9 குழு அமைத்து, கண்ணகாணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த மழையால் நெல்மணிகள் ஈரமாகி சேதமடைந்தன. அதனால் 22 சதவீதம் ஈரப்பதம் நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். விரைவில், தற்போது உள்ள ஈரப்பதம் அளவை விட கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில், 10 மாவட்டங்களில், 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில், 806 நெல் சேமிப்பு குடோன்கள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, 106 குடோன்கள் திறக்கப்பட்டு, 1.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி, மாவு, குருணை போன்ற பல்வேறு விதங்களில் விற்பனை செய்ததாக, 15,166 வழக்குகள் பதியப்பட்டு, 15,278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 135 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்துக்கு இணையான பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களில் முக்கியமானவர்களை பிடிக்க, டி.ஜி.பி., அருண் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் போன்றவர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

"நம்ம ஊர், நம்ம ரேஷன் கடை" திட்டத்தில் மாவட்டத்துக்கு, 75 ரேஷன் கடையை மேம்படுத்த திட்டமிட்டதில், 5,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 18 மாதங்களில், 35 ஆயிரத்து மேற்பட்ட கடைகளும் நவீனப்படுத்தப்படும். சேதமடைந்த பழமையான ரேஷன் கடை கட்டங்கள், உள்ளாட்சி நிதி, எம்.எல்.ஏ., நிதி போன்றவற்றில் புதியதாக கட்டப்பட உள்ளன. இந்த ஆண்டு, 50 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 16 லட்சத்து, 58 ஆயிரம் மெட்ரிக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 15 லட்சம் மெட்ரிக் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தம், 43 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் நெல் சேதமாவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 1.5 கோடி குடும்பங்கள், ஏதேனும் ஒரு சங்கத்தில் உறுப்பினராக உள்ளன. அவர்கள் மூலமாக, பல்வேறு சங்கங்களின் வைப்புத் தொகை 67 ஆயிரம் கோடி. அதில், விளிம்பு நிலைக்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு, வேளாண்மை உட்பட பல வகையில், 40 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல், பிளாஸ்டிக் அரிசி என்ற தவறான தகவல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் கர்ப்பிணிகள், குழந்தைகள் இறப்பை முழுமையாக குறைக்க வேண்டும். அதனால், சத்தான உணவை உறுதி செய்யும் வகையில், நுாறு பருக்கையில், ஒரு பருக்கை தான் செறிவூட்டப்பட்ட பருக்கையாக வழங்கப்படுகிறது. அனைத்து அரிசியிலும், பல்வேறு நுண் சத்துக்களை சேர்த்து வழங்குவதில்லை. அதனால், செறிவூட்டப்பட்ட அரிசியையும், சாதாரண அரிசியையும் தனித்தனியாக வீடியோ பதிவிட்டு, மக்களை குழப்புகின்றனர். அதில் உண்மை இல்லை.

விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, அரசின் கொள்கை ரீதியான முடிவு. விவசாயிகளின் கோரிக்கை பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ராகிக்கு விலை நிர்ணயம் செய்து, 95 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற விளைபொருட்களும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.‌

இதையும் படிங்க: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டத்திருத்தம்: உயர்நீதிமன்றம் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.