ETV Bharat / state

25 ஆண்டுக்கு பிறகு திருச்சி புத்தாநத்தம் செல்வ விநாயகர் கோயில் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

author img

By

Published : Apr 22, 2023, 3:50 PM IST

திருச்சி புத்தாநத்தம் செல்வ விநாயகர் கோயில் நில வழக்கை தள்ளுபடி செய்து மணப்பாறை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாநத்தம் செல்வ விநாயகர் கோயில் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
25 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாநத்தம் செல்வ விநாயகர் கோயில் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

அரசு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் அளித்த பேட்டி

திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்வ விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்திற்கு முகமது ஹனிபா என்பவர் பட்டா பெற்றுள்ளார். இவ்வாறு பட்டா பெற்ற அந்த இடத்தை, தாங்கள் அனுபவித்துக் கொள்ள உரிமை வழங்க வேண்டும் என மணப்பாறை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கை விரைந்து முடிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் படி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (ஏப்ரல் 21) மணப்பாறை உரிமையியல் நீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. அது மட்டுமல்லாமல், தற்போதைய சந்தை மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலம், செல்வ விநாயகார் கோயிலுக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாடிய முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், "புத்தாநத்தம் அருள்மிகு செல்வ விநாயகர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 4.5 ஏக்கர் நிலத்தை, முகமது ஹனிபா மற்றும் அவரது வாரிசுதாரர்கள் ஆக்கிரமிப்பு செய்து, அதற்கு பட்டா வாங்கி, அந்த இடம் தங்களுக்குத்தான் என 1999ஆம் ஆண்டு மணப்பாறை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், அந்த வழக்கை வளநாடு பகுதியைச் சேர்ந்த கமருதீன் என்பவர் நடத்தி வந்தார்.

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 1999ஆம் ஆண்டு அவருக்கு வயது 16. இந்த வழக்கின் வாதிகள் யாரும் விசாரணைக்காக நீதிமன்றம் வரவில்லை. மேலும், 1927 மற்றும் 1964 ஆகிய ஆண்டுகளில், இந்த நிலம் கோயிலுக்கு பாத்தியப்பட்டது என்று அரசுப் பதிவேடுகளில் இருக்கும் நிலையில், 1963ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இனாம் ஒழிப்புச் சட்டப்படி, செல்வ விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான அந்த இடத்திற்கு பட்டா பெற்றுள்ளார்.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, அறநிலையத்துறைக்குச் சொந்தமான அந்த இடத்தை சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி இன்றி பட்டா வாங்கியுள்ளார். இது நிலத்தை அபகரிக்கும் முயற்சியாகக் கருதி இந்த வழக்கை தள்ளுபடி செய்திடுமாறு அரசு தரப்பு வாதமாக முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வாதங்களை ஏற்றுக் கொண்ட மணப்பாறை உரிமையியல் நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த இடம் செல்வ விநாயகர் கோயிலுக்குத்தான் சொந்தமானது என தீர்ப்பு வழங்கி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் அரசு மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம், மாற்று மதத்தினரிடம் இருந்து மீட்கப்பட்டது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: குன்னூரில் 78ஆவது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம்... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.