ETV Bharat / state

திருவிழாவில் பிரச்னை - பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட லத்தி சார்ஜ்!

author img

By

Published : Apr 4, 2022, 4:42 PM IST

திருச்சியிலுள்ள மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

கலவரத்தை கட்டுப்படுத்திய காவல் துறை
கலவரத்தை கட்டுப்படுத்திய காவல் துறை

திருச்சி: தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா கடந்த 15ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 5 நாள்களாக திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது. மதுரை காளியம்மன், ஓலை பிடாரியம்மன் ஆகிய இரு தெய்வங்களும் தனித்தனியே சுமார் 40 அடி உயரமுள்ள 2 தேர்களில் எழுந்தருளுவர்.

அப்போது பக்தர்கள் திருத்தேரை தோளிலும், தலையிலும் சுமந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (ஏப். 03) ஒரு பிரிவினர் பூத்தட்டு எடுத்துச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், பாதுகாப்பிற்காக இருந்த காவல் துறையினர் வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். அப்போது இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களை காவல் துறையினர், விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினர் திருச்சி - நாமக்கல் சாலையில் கார்த்தியைபட்டி என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு சுமார் 11 மணியளவில் தொடங்கிய சாலை மறியல் போராட்டம், இன்று அதிகாலை சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி எஸ்பி சுஜித் குமார் உள்ளிட்ட காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், பொதுமக்கள் பிடிவாதமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட லத்தி சார்ஜ்

இதனால், தயாராக நிறுத்தியிருந்த வஜ்ரா வாகனத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது காவல் துறையினர் லத்தியால் அடித்து பெண்கள் பலரையும் விரட்டியடித்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை செம்பனார்கோயிலில் சிலம்பப் போட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.