ETV Bharat / state

"பா.ஜ.க வை தன் தோளில் இருந்து இறக்கும் தைரியமும், தெம்பும் அ.தி.மு.க.விற்கு இல்லை" - ஜவாஹிருல்லா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 7:54 AM IST

Updated : Sep 25, 2023, 11:18 AM IST

Jawahirullah criticized the ADMK BJP alliance: பா.ஜ.க வை தன் தோளில் இருந்து இறக்கும் தைரியமும், தெம்பும் அ.தி.மு.க விற்கு இல்லை என்றும் குறைந்தபட்சம் 2024 தேர்தல் வரையாவது அவர்கள் கூட்டணி தொடரும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

Jawahirullah criticized the ADMK BJP alliance
பா.ஜ.க வை தன் தோளில் இருந்து இறக்கும் தைரியமும் தெம்பும் அ.தி.மு.க விற்கு இல்லை - ஜவாஹிருல்லா

திருச்சி: மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "நீண்ட காலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.

இந்த நிலையில் எங்களின் கோரிக்கையை ஏற்று, ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 49 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். 49 பேரில் ஒருவர் சிறையிலேயே உயிரிழந்து விட்டார், இருந்த போதும் மற்றவர்கள் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்.

அதனைக் கண்டித்தும் உடனடியாக அந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி. ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் எம்.பி தானிஷ் அலியைப் பார்த்து அவதூறு கருத்து வெளியிட்டார்.

அவரின் பேச்சில் பாஜகவினரின் ரத்த நாளங்களில் இஸ்லாமிய வெறுப்பு இருப்பதைக் காட்டுகிறது. மேலும், அவரின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் அது தண்டனை ஆகாது. மாறாக ரமேஷ் பிதூரி எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரக் கூடாது என்கிற நோக்கில் தான் அந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்த பின்பு தான் மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என கூறி உள்ளார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து தொகுதி மறுவரையறை செய்தால் தென் மாநிலங்களில் தற்போது உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அதற்காகத் தான் பா.ஜ.க அதை செய்யத் துடிக்கிறது எனவே மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யாமல் நிலப்பரப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.

பா.ஜ.க வை தன் தோளில் இருந்து இறக்கும் தைரியமும் தெம்பும், தைரியமும் அ.தி.மு.கவிற்கு இல்லை. குறைந்தபட்சம் 2024 தேர்தல் வரையாவது அவர்கள் கூட்டணியில் தொடர்வார்கள். இந்தியா கூட்டணியின் வீச்சு கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட பலரையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இணைய கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்து உள்ளார் என்றால் அது இந்தியா கூட்டணியின் பலத்தைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அண்ணாமலைக்கு ஏற்ற கட்சி பாஜக அல்ல" - துரை வைகோ!

Last Updated : Sep 25, 2023, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.