ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநர் நமக்காக பிரச்சாரம் செய்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jul 27, 2023, 8:46 AM IST

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களிடம் எடுத்துரைத்தார்.

Etv Bharat
Etv Bharat

திருச்சி: ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு !

திருச்சி: ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நேற்று (ஜூலை 26) திருச்சியில் நடைபெற்றது. திமுகவின் 15 மாவட்டங்களில் இருந்து, 12,642 ஓட்டுச் சாவடி பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,திராவிட இயக்கம் துவங்கி 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை முடிந்துள்ளதாக கூறினார். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி என்பதை அடிப்படையாக மனதில் கொண்டு கடமையாற்றி வருவதாகவும், கரோனா முதல் அலையின்போது திமுக ஆட்சியில் இல்லை. ஆனால் அதில், திமுகவினர் சிலரை இழந்த போதிலும், முழுவீச்சில் நிவாரணப்பணி செய்யப்பட்டதாக அவர் கூறினார். இந்நிலையில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது கட்சி.

தேர்தலை எதிர்கொள்ளும் முறை: ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான், லோக்சபா தேர்தலில், ‘நாடும் நமது, நாற்பதும் நமது’ என்று முழங்கி இருப்பதாகவும், வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி, வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும், திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் என்ற புத்தகத்தை படித்து, அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும், மக்களுக்கு தேவையானவற்றை கண்டறிந்து, அதனை நிறைவேற்றிக் கொடுக்குமாறும் அவர் கேட்டுக் கொன்டார்.

கட்சியின் உயர்மட்ட மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் போன்றவர்கள் ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் திமுக ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும், பரப்புரையால் அவதுாறுகள் எல்லாம் சுக்குநுாறாக நொறுங்கிப் போக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடங்களை பயன்படுத்தி பதில் கொடுக்க வேண்டும்: பரப்புரை பாணி மாறி விட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், பொறுப்பாளர்கள் சமூக ஊடங்களில் கணக்கு துவங்க, நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அதன் மூலம் அவதுாறுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார். எதையாவது சொல்லி திசை திருப்புவதற்கு பலியாகி விடக்கூடாது.

தேர்தல் வரை அவரே ஆளுநராக இருக்கட்டும், நமக்கு ஓட்டுக்கள் அதிகரிக்கும்: தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாடு ஆளுநர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்று கேட்கவில்லை, தேர்தல் வரை அவரே இருக்கட்டும், நமக்கு ஓட்டுக்கள் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது, என்பதுதான் முக்கியம் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சிதைத்து விட்டதாக கூறிய அவர், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் அவர் கூறினார். அதனால், இந்தியா முழுமைக்கும் திமுக அணி ஆட்சிக்கு வர வேண்டும் எனவும், பாஜக ஆட்சி நீடித்தால் ஜனநாயகம், சமூக நீதி, அரசியல் அமைப்புச் சட்டம் இவற்றை காப்பாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

பழனிசாமி போன்ற ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு பிரதமர் ஊழலை பற்றி பேசலாமா எனவும், ஊழல் காரணமாக கர்நாடகா மக்கள் விரட்டியடித்த சம்பவம் மறந்து விட்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அவர்களை, இந்த தேர்தலில் முழுமையாக வீழ்த்தியாக வேண்டும் என அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 40 தொகுதி போனாலும், மற்ற வடமாநில எம்பிக்களை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுவதாக அவர் கூரினார்.

பல்வேறு மொழி, பல்வேறு சிந்தனை கொண்டவர்களுக்கு எதிரான கட்சி பாஜக: ஒற்றை கட்சி ஆட்சி அமைந்தால், ஒருவர் கையில் அதிகாரம் சென்று விடும். அதற்காக இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டணிதான் இந்தியாவை காப்பாற்றப் போகிறதாகவும் அவர் கூறினார். இதை, பிரதமர் மோடியால் தாங்கிக் கொள்ள முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் சொல்வதுபோல், இது வாரிசுகளுக்கான கட்சிதான்: ஆரியத்தை வீழ்த்த புறப்பட்ட திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள் என்பதை தைரியமாக, பெருமையுடன் சொல்ல முடியும். தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி மற்ற மாநிலங்களையும், மணிப்பூர்போல் ஆகிவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர்ப்படை தளபதிகள் நீங்கள். உங்களில் ஒருவனான நான், உங்களை நம்பி, லோக்சபா தேர்தலை ஒப்படைத்திருக்கிறேன். இந்தியா வெல்லும். அதை 2024 தேர்தல் சொல்லும்.

இதனைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன், “திருச்சி மாநகரில் வாக்குச்சாவடி வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு வந்து பார்த்தால் இது பாசறை கூட்டம் என்று சொல்வதா அல்லது மாநாடு என்று சொல்வதா, அந்த அளவிற்கு பிரமாண்டமாக உள்ளது. மாநாடு நடத்துவதற்கே பிறப்பு எடுத்தவர் நேரு” என தெரிவித்தார்.

“கருணாநிதி இருந்தபோது திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இருந்தார்கள். தற்போது நமது தலைவர் பொறுப்பேற்ற பிறகு 2 கோடி உறுப்பினர்களை உருவாக்கியுள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளில் எவரும் செய்ய முடியாத சாதனைத் திட்டங்களை பொதுமக்களுக்காக நமது தலைவர் செய்துள்ளார்.

ஒரு காலத்தில் மன்னர்கள் போர் செல்வதற்கு முன்பு படை வீரர்களை அழைத்து பயிற்சி அளிப்பர். அதேபோல் நமது தலைவர் தற்போது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை அழைத்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி பணியாற்றுவது என்பதை குறித்து பயிற்சி அளிக்கிறார். நிச்சயம் மாபெரும் வெற்றியை நமது கட்சி அடையும்” என தெரிவித்தார்.

தனி மனிதன் வெற்றி இல்லை, நமது வெற்றி இந்தியாவை காப்பாற்றும்: அதனைத் தொடர்ந்து பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, “ கரோனா காலக்கட்டத்தில் மக்களை காப்பற்ற தன் உயிரை பொருட்படுத்தாமல் உழைத்தவர் மு.க.ஸ்டாலின். தொற்று வைரஸ் பரவலை தடுக்க வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் விரைந்து செய்து கொடுத்தும், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் உயிரை காப்பாற்றியவர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின்.

குறிப்பாக, ஆட்சியில் இல்லாமல் இருந்தபோது கரோனா அதிகமாக பரவல் காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தியவர். இதனால் திமுக எம்எல்ஏ அன்பழகன் மற்றும் பல திமுக நிர்வாகிகளை நாங்கள் இழந்தோம். ஆனாலும், மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் நம் தலைவர்.

குறிப்பாக, உலக நாடுகள் அனைத்தும் திரும்பி பார்க்கும் வகையில் உலக செஸ் போட்டியை 4 மாதங்களில் ஏற்பாடு செய்து மிக பெரிய அளவில் வெற்றியை அடைந்தவர் நம் தலைவர். மணிப்பூரில் தொடர் வன்முறை, பெண்களின் அவல நிலை இந்தியாவிற்கு தலை குணிவு ஏற்பட்டுள்ளது. ஆகையால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால்தான் மக்களையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் காப்பாற்ற முடியும்.

ஆகையால் நாடாளுமன்றத் தேர்தல் தனி மனிதன் வெற்றி இல்லை. நமது வெற்றி இந்தியாவை காப்பாற்றும். மேலும் நமது செயல்கள், திட்டங்களை சமூக வலையதலம் மூலம், மற்றும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இதனையடுத்து பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, “திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். திமுகவை நம்புங்கள், நமது தலைவரை முழுமையாக நம்புங்கள். ஒரு சில மாதங்களில் உங்களுடைய பிரச்னைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

தினந்தோறும் தொடர்ந்து நமது ஆட்சியின் மீது பல்வேறு தரப்பினர் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். அவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. மேலும் நாம் அனைவரும் உண்மையாக தலைவருக்கு பணியாற்றினால், உழைப்புக்கு ஏற்ற பதவிகள் நிச்சயம் கிடைக்கும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் சிறப்பாக, தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

நாம் சரியாக பணியாற்றவில்லை என்றால், மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம். நாம் அனைவரும் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று தீர்மானிக்கும் இடத்தில் உள்ளோம். ஆகையால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நம் அனைவரும் தீவிரமாக செயலாற்றி வெற்றி பெறுவோம்”, என்றார்.

இதையும் படிங்க: 'மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியாவை அழித்துவிடுவார்' - சீமான் பேச்சு:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.