ETV Bharat / state

சாலையோரம் தூங்கியவர்கள் மீது கார் மோதி கோர விபத்து - 3 பேர் பலியான சோகம்!

author img

By

Published : Mar 12, 2023, 12:10 PM IST

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் மீது அசுர வேகத்தில் கார் மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

ஸ்ரீரங்கத்தில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது கார் மோதி கோர விபத்து - 3 பேர் பலியான சோகம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் காவேரி பாலம் பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் யாசகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். அம்மா மண்டபம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் யாசகம் பெற்று தங்களது அன்றாட வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சாலையோர பாதசாரிகள் நடைமேடையில் படுத்து உறங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றிரவு (மார்ச்.11) ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மாம்பழச்சாலையில் கீதாபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே உள்ள பாதசாரிகள் நடைமேடையில் யாசகர்கள் சிலர் படுத்து உறங்கி கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன் மற்றும் அஸ்வந்த் ஆகியோர் அசுர வேகத்தில் காரில் அவ்வழியாக வந்துள்ளனர். அப்போது, காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றோர், யாசகர்கள் ஆகியோர் மீது ஏறி இறங்கியது.

இந்த கோர விபத்தில் விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், படுகாயம் அடைந்த இருவர் அருகில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுரையின் பெயரில் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மாவட்ட தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று(மார்ச்.12) காலை இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கார் ஓட்டி வந்த இருவரையும் கைது செய்த கோட்டை வடக்கு போக்குவரத்து போலீசார், மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விபத்தில் இறந்தவர்களின் தகவல் குறித்து எதுவும் வெளியாகவில்லை.

இருவரும் மதுபோதையில் காரை இயக்கினார்களா? உள்பட பல்வேறு கோணங்களில் கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களை பரிசோதித்ததில் அவர்கள் மதுபோதையில் காரை இயக்கவில்லை என்றும் லட்சுமி நாராயணன், அஸ்வந்திற்கு கார் ஓட்ட கத்து கொடுத்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அப்பொழுது கார் டயர் வெடித்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைமேடையில் மோதி அங்கு படுத்திருந்த யாசகர்கள் மீது ஏறி இறங்கியதாக போலீசார் கூறியுள்ளனர். ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், சமீபகாலமாக அம்மா மண்டபம் பகுதியில் அடிக்கடி விபத்து மற்றும் உயிர் சேதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, அந்த பகுதியில் வேகத்தடை‌ மற்றும் இரும்பு பேரி கார்டுகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து சம்பவம் ஶ்ரீரங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் சாலையில் உறங்கும் யாசகர்களின் பாதுகாபு கருதி தமிழ்நாடு அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கு: தப்பிக்க முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.