ETV Bharat / state

சிவில் சர்வீஸ் பணி நியமனத்தை ரத்து செய்யக்கோரிய மதுரை பூரணசுந்தரி வழக்கு!

author img

By

Published : Oct 21, 2020, 10:07 PM IST

இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் வழங்கப்பட்ட சிவில் சர்வீஸ் பணி நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு!
இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் வழங்கப்பட்ட சிவில் சர்வீஸ் பணி நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு!

சென்னை: சிவில் சர்வீஸ் தேர்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் வழங்கப்பட்ட பணி நியமனத்தை ரத்து செய்யக்கோரிய பூரணசுந்தரி தொடுத்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த விழித்திறன் சவால் கொண்ட மாணவி பூரணசுந்தரி சென்னையில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 286ஆவது தரவரிசைப் பெற்று இருந்தேன்.

விழித்திறன் சவால் உடையவர்களுக்கு இந்திய ஆட்சிப் பணியில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய பணியிடத்தில் என்னை நியமித்திருக்க வேண்டும். இருப்பினும், எனக்கு இந்திய வருவாய் பணியின் கீழே உள்ள வருமான வரித்துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விழித்திறன் சவால் உடைய மாற்றுத் திறனாளியான தனக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. இடஒதுக்கீடு நடைமுறையை முறையாக பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட பணி நியமன ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். மாற்று திறனாளிகள் சட்டம் 2016யின் படி எனக்கு ஐஏஎஸ் பணி வழங்க மத்திய அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவானது, மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் எஸ்.என்.டெர்டல் மற்றும் நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த தீர்ப்பாயம், மனுதாரரின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கமாறு, மத்திய பணியாளர் துறை செயலர் மற்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் உத்தரவிட்டது.

மேலும், 2019 சிவில் சர்வீஸ் தேர்வின் படி வழங்கப்பட்ட நியமன ஒதுக்கீடு, வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து, விசாரணையை 2021 ஜனவரிக்கு தள்ளிவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.