ETV Bharat / state

புலம்பெயர் தொழிலாளர்களின் பள்ளி செல்லாத 8 ஆயிரம் குழந்தைகள்..! கல்வி கண் திறக்க அரசு மனது வைக்க கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 6:56 PM IST

Updated : Nov 6, 2023, 7:22 PM IST

Tiruppur migrant workers children education: திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 8 ஆயிரம் பேர் தமிழ் மொழி தெரியாததால் கல்வி கற்க முடியாமல் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு கல்வி பயிலத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனப் புலம்பெயர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tiruppur migrant workers children education
பள்ளி செல்லாமல் வீடுகளில் முடங்கும் புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள்

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பாதிப்பு

திருப்பூர்: பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரை நம்பி சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அதில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள். பிழைப்பிற்காக அசாம், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இந்த பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

வடமாநில தொழிலாளர்களுக்கு, திருப்பூர் வாழ்வு தரும் ஊராகத் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு வரும் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தங்கி, பின்னலாடை நிறுவனங்களில் பணி செய்கிறார்கள். நிறைய இடங்களில் நிறுவனங்களே தங்குமிடங்களை அமைத்தும் தருகின்றன.

சிறு சிறு வீடுகளை வாடகைக்கு விடும் திருப்பூர்காரர்கள் வடமாநில தொழிலாளர்களுக்கென தனியாக வீடு கட்டி வாடகைக்கு விடுவதை ஒரு தொழிலாகவே செய்வதையும் இங்கு பார்க்க முடிகிறது. ஒரே இடத்தில் 300 வீடுகள் வரிசையாகக் கட்டி, குழுவாக வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள். இதில் செட்டில்மெண்ட் போலப் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் குழுவாகத் தங்கி, பின்னலாடை நிறுவனங்களிலும் அதுசார்ந்த நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள்.

இவ்வாறு திருப்பூரில் ஏறக்குறை 40 சதவீத அளவுக்கு வடமாநில தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், திருப்பூருக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளிகளுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்குவதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. தாய்மொழிக் கல்வி கிடைக்காத நிலையில், தமிழில் கற்க வேண்டி இருப்பதால் கல்வி குறித்த புரிதல் இல்லை.

இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக அரசுப் பள்ளிகளுக்குச் செல்ல மறுக்கும் அவல நிலை உள்ளது. மேலும், வீட்டில் உள்ள பெரிய குழந்தைகள் சிறிய குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதும், பள்ளி செல்லாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமாகிறது. இதன் காரணமாக வீட்டிலேயே முடங்கும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி இல்லாமல் வளரக்கூடிய நிலை திருப்பூரில் கண்கூடாகக் காணமுடிகிறது.

அவர்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக விளையாடுவதும், வீட்டிலேயே தங்கிக் கொண்டு இருப்பதையும் காணமுடிகிறது. இவ்வாறு இருக்கும் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் வளர்வதும் சிக்கலாகிறது. இதனால் போதைப் பொருட்களை நாடிச்செல்லும் அபாய நிலையும் உள்ளது. ஆகையால் திருப்பூர் சேவ் தன்னார்வ அமைப்பு சார்பில், வடமாநில தொழிலாளர்கள் பகுதிகளில் சிறு அறைகளில் 3 மணி நேரம் டியூசன் நடத்துகிறார்கள்.

ஆனால், அதையே முழுமையாக அரசு இயந்திரம் மூலம் செய்வது தான் குழந்தைகள் கல்வியை முழுமையடைய வைக்கும். இதுகுறித்து திருப்பூர் சேவ் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் அலோசியஸ் கூறுகையில், "திருப்பூரில் 3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர் உள்ள நிலையில் 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளுக்கு வரும் இவர்கள் மொழி புரியாமல் பள்ளிக்கல்வியை நிறுத்தி விடுகிறார்கள். மேலும், வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் அவர்கள் கல்வி கற்பதில்லை. முந்தைய காலங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் (NCLP) திட்டமானது, குழந்தை தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களைக் கல்வியில் முறைப்படுத்த உதவியது.

சிறப்பு மையங்கள் மூலம் அவர்களுக்குப் பாடங்கள் அளிக்கப்பட்டு முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டார்கள். தற்போது இந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். மத்திய அரசு மீண்டும் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் இந்த குழந்தைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

எங்களைப் போன்ற தன்னார்வ அமைப்புகளைப் பயன்படுத்தி வடமாநில தொழிலாளர்களுக்கு அவர்கள் மொழியிலேயே கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். சிறப்பு மையங்கள், உணவு போன்றவை அளிக்கப்படும் இந்த குழந்தைகளுக்குச் சிறப்பு மையங்களில் கல்வி அளித்து, முறையான பள்ளிகளுக்கு அனுப்ப வாய்ப்பாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ராயபுரம் பகுதியில் வசிக்கும் வடமாநில தொழிலாளி சரோஜ்குமார் கூறுகையில், "எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்றால் தமிழ் புரிவதில்லை. அதனால் செல்ல மறுக்கிறார்கள். எனவே எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க இந்தி, தமிழ் இரண்டிலும் சொல்லித்தர வேண்டும். தனியார் பள்ளிகளில் சென்று கல்வி கற்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை" எனக் கூறினார்.

இதுகுறித்து வீரபாண்டி நொச்சிபாளையம் பகுதியில், வடமாநில குடியிருப்பில் வசித்து தன்னார்வ மையத்தில் கல்வி பயின்று வரும் 12 வயது மாணவி அஞ்சலி கூறுகையில், "நானும் எனது அண்ணனும் பள்ளிக்குச் சென்றோம். பள்ளியில் எனக்குத் தோழிகள் தமிழ் சொல்லித் தந்தார்கள். நான் அவர்களுக்கு இந்தி சொல்லித் தந்தேன். எனது அண்ணனுக்குத் தமிழ் புரியவில்லை. எனக்கும் படிக்க கஷ்டமாக இருந்தது. அதனால் பள்ளியிலிருந்து நின்று விட்டோம்" என்றார்.

தற்போது மொழி தெரியாததாலும், சிறிய குழந்தைகளை கவனித்துகொள்ள வேண்டி இருப்பதாலும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்காமல் முடங்கி இருப்பதைத் திருப்பூரில் பல்வேறு வடமாநில குடியிருப்புகளில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மேலும் அடிப்படை கல்வி என்பது அனைவருக்கும் அவசியமானது.

ஆகையால் திருப்பூரில் கல்வி இல்லாமல் வீட்டில் முடங்கும் குழந்தைகளில் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் பள்ளி செல்ல வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு தான் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் தேர்தல் பணியில் வெடிகுண்டு விபத்து! எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி!

Last Updated : Nov 6, 2023, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.