ETV Bharat / state

விளையாடியபோது காணாமல் போன சிறுவன்! வாட்ஸ்அப் பகிர்வால் விரைவில் கண்டுபிடிப்பு

author img

By

Published : Jul 28, 2020, 10:47 AM IST

திருப்பூர்: காலையில் காணாமல் போன சிறுவன், அடுத்தடுத்த வாட்ஸ்அப் பகிர்வுகளால் மாலையில் மீண்டும் கிடைத்த சம்பவம் திருப்பூரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை கடத்தியவர்களை சிசிடிவி காட்சியின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Breaking News

திருப்பூரைச் சேர்ந்த காஜா மைதீன் என்பவரின் நான்கு வயது சிறுவன் ஜாவித் அகமது, நேற்று (ஜூலை 27) காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனான். இதையடுத்து மகனை காணவில்லை என காஜா மைதீன் அக்கம்பக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தேடியுள்ளார். இருப்பினும் ஜாவித் அகமது கண்டறியப்படாத நிலையில், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக வாட்ஸ்அப்பில் தனது மகனின் படத்தை பகிர்ந்து, மகன் ஜாவித் அகமதுவை காணவில்லை எனவும், அவரை கண்டால் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் தனது செல்போன் எண்ணையும் பகிர்ந்தார். இந்தச் செய்தி திருப்பூர் முழுவதும் வேகமாக பரவியது. சிறுவனை காணவில்லை என்ற இந்த தகவல் ஏராளமானோரால் பகிரப்பட்டதுடன், சிறுவனை தேடும் முயற்சியில் பலரும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சிறுவனை கடத்திய அடையாளம் தெரியாத நபர்கள், சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் அச்சமடைந்து, கடத்தப்பட்ட சிறுவன் ஜாவித் அகமதுவை எங்கும் கொண்டுச் செல்ல முடியாமல் மாலை நேரத்தில் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அருகே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் உடனடியாக சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காலையில் காணாமல் போன சிறுவன் வாட்ஸ்அப் பகிர்வின் மூலம், மாலையிலேயே கண்டறியப்பட்ட சம்பவம் திருப்பூரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சமூக வலைதளங்களை இப்படியும் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என இச்சம்பவம் பொதுமக்களிடையே உணர்த்தியுள்ளது.

காணாமல் போன சிறுவன் மீண்டும் கிடைத்தபோதிலும், அவனைக் கடத்திய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: முப்பது ஆண்டுகளுக்கு மேல் நடந்த போராட்டம் - மாநகராட்சிக்கு கிடைத்த 3 கோடி ரூபாய் சொத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.