ETV Bharat / state

புறம்போக்கு நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

author img

By

Published : Jul 20, 2020, 7:48 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கலப்பை பட்டி கிராமத்தில் புறம்போக்கு நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் போராட்டம்
கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தார் ஒட்டம் கலப்பை பட்டி கிராம மக்கள் ஊர் நாட்டாண்மை லட்சுமணன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு வந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், புறம்போக்கு நிலத்தை மீட்டு விளையாட்டு திடல், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட வசதிகள் செய்து தரவேண்டும் என கோஷங்களை முழங்கினர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் வழங்கிய மனுவில், கயத்தார் வட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கலப்பை பட்டி கிராமத்தில் உள்ள அரசு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சட்ட விதிகளுக்கு எதிராக இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. கலப்பை பட்டி கிராமத்தில் விளையாட்டுத்திடல், பயணிகள் நிழற்குடை, பூங்கா, கால்நடை மருத்துவமனை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட எந்த அரசு நலத் திட்டங்களும் வரவிடாமல் அரசு நிலத்தை தங்களது நிலத்தில் இடையூறு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக நாங்கள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என, அதிகாரிகள் பலரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.

எனவே அரசு நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். கிராம மக்களிடம் நேர்முக உதவியாளர் ரகுபதி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஜூலை 22ஆம் தேதி சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.