ETV Bharat / state

கொம்புத்துறையா..? கடையக்குடியா..?.. திருச்செந்தூர் அருகே நூதன பிரச்சனை.. அரசு தலையிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 5:19 PM IST

Updated : Oct 3, 2023, 2:40 PM IST

Thoothukudi village name issue: தூத்துக்குடியில் கொம்புத்துறையா? அல்லது கடையக்குடியா? (Kombuthurai vs Kadaiyakudi) என்று ஊர் பெயரால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் சமூக மக்களுக்கு இடையே பிரச்சனை நிலவி வருகிறது. மத மோதலாக மாறும் முன்னர் அரசு விழித்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

two communities issues for town name
கொம்புத்துறையா?... கடையக்குடியா?... இரு மதத்தினருக்கிடையே அதிகரித்து வரும் மோதல்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ளது காயல்பட்டினம் நகராட்சி. இந்த ஊரில் பெருபான்மையாக முஸ்லிம் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த ஊரை அடுத்து 'கொம்புத்துறை' என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு 200க்கு மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்கள் கிறிஸ்தவ சமூகமான ரோமன் கத்தோலிக்கர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

முஸ்லிம் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் காயல்பட்டினம் நகராட்சியில் உள்ளடக்கிய கொம்புத்துறை கிராமத்தை, முஸ்லிம் சமூக மக்களால் 'கடையக்குடி' என்று அழைக்கப்படுகிறது. இது தான் இங்கு இருக்கும் பெரிய பிரச்னையே!.. ஊரின் பெயர் 'கடையக்குடியா' அல்லது 'கொம்புத்துறையா'? என வழக்கு போடப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது.

இப்படி இருக்கும் பட்சத்தில், சமீபத்தில் இரு மீனவ சமூகத்தினர் முஸ்லிம் மதத்துக்கு மாறியது மேலும் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அந்தோணி பிராங்கோ என்கிற முகமது பிராங்கோ(29), ஜெபாஸ்டியன் என்கிற ஈசா(32), சலீம் என்கிற வில்பிரட் ஆகியோர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். இதில், சலீம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

அப்போது ஒரு சில நெருக்கடி காரணமாக அந்த மீனவ கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம், தற்போது காயல்பட்டினத்தில் வசித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் முஸ்லிம் மதம் மாறிய இருவருக்கும், அதே எதிர்ப்புக் குரல் பலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கொம்புத்துறை மீனவ சங்கத்தினர் கொம்புத்துறை கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் கிறிஸ்தவர்களோ இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு ஒரு விடை தெரியாமல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மாட்டோம் என கரையிலே தங்கியுள்ளனர். இதனால் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்று முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த முகமது நியாமத்துல்லா என்பவரிடம் கேட்டோம்.

அப்போது அவர் நம்மிடையே பகிர்ந்த சில விஷயங்கள், "கடந்த 47 வருடங்களுக்கு முன் கன்னியாகுமரி அருகே உள்ள கடற்கரை கிராமத்தில் இருந்து கடல் தொழிலுக்காக அந்த மக்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கு இடம் கொடுத்து அப்போது ஆதரவு அளித்தோம். பின்னர், அப்பகுதி மக்கள் தாங்கள் வழிபட ஆலயம் அமைத்தனர். அதற்கும் நாங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றும் சொல்லவில்லை.

பின்னர், 'கடையக்குடி' என்ற ஊர் பெயரை 'கொம்புத்துறை' என்று மாற்றினர். அப்போதும் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது அவர்கள் மதத்தில் இருந்து இருவர் எங்கள் மதத்திற்கு வந்துள்ளனர். அதனை பொறுக்க இயலாதவர்கள் வேண்டும் மென்றே ஊர் பெயர் பலகையை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த இருவரும், மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.

மதம் மாறியதால் தொழில் செய்ய விடாமல் முட்டுகட்டை போடுகின்றனர். ஒரு மதத்தில் இருந்து வேறு மதம் மாறுவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம், மதம் மாறக் கூறி யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை. ஆனால் இங்கோ மதம் மாறி போனால் எங்கள் ஊரில் இருக்க கூடாது, மீன்பிடி தொழிலுக்கும் வர கூடாது என்று கூறுவது, அதனையும் மீறி இருந்தால் வீட்டிற்கு வரும் குடிநீரை வராமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மீன் தொழில் செய்து வரும் இவர்களது படகை தள்ளி விடுவதற்கு, டிராக்டர் பயன்படுத்தபட்டு வருகிறது. இந்த டிராக்டர் கொம்புத்துறை மீனவர் நலச் சங்கத்திற்கு சொந்தமானது என்பதால் டிராக்டர்களை கடலில் தள்ளுவதற்காக வழங்குவதை நிறுத்திவிட்டனர். ஆனால் இந்த டிராக்டர்களை ஐக்கிய ஜமாத் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் புதியதாக வாங்கி கொடுத்தோம்.

ஆனால், உள்ளூர் மீனவர்கள் அதையும் பயன்படுத்த விடாமல் தடுத்து பிரச்சனை செய்து வருகின்றனர். இந்திய திருநாட்டில் மதம் மாறினால் அவர்கள் அகதி மக்களா? நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான். மதம் மாறிய மீனவர்களை கடல் தொழிலுக்கு அனுமதித்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். வேறு எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து கொம்புத்துறை பகுதியில் உள்ள மீனவ நல சங்க நிர்வாகி கூறுகையில், "தற்போது ஊர் பெயர் தான் பிரச்னையாக உள்ளது. யாரும் மதம் மாறி போனவர்களை பற்றி கவலைப்படவும் இல்லை, மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதை தடுக்கவுமில்லை, இவர்களை சீண்டவுமில்லை. கிராமத்திற்கு 'கடையக்குடி' என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

ஊரின் பெயர் 'கொம்புத்துறை' என்று தான் காலம், காலமாக உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தினர் 'கடையக்குடி' என்று அழைத்து வருகின்றனர். இது தான் எங்கள் பிரச்னையே. மதம் மாறிய இவர்கள் படகை தள்ளி விடுவதற்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்து வழங்கப்பட்ட டிராக்டர்களில் ஊர் பெயரை 'கடையக்குடி' என்று எழுதி வைத்துள்ளனர்.

அப்போது மதம் மாறிய இவர்கள் மூலம் அவர்கள் நினைப்பதை சாதிக்க முற்படுகின்றனரா?. ஏற்கனவே ஊர் பெயர் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், "எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல" ஊர் பெயரை 'கடையக்குடி' என்று எழுதி வைத்திருக்கின்றனர். அப்போது முஸ்லிம் சமூகத்தினர் வன்முறையை தூண்டி விடுகின்றனரா?.

இது இவ்வாறே போய் கொண்டிருந்தால் மிகப் பெரிய பிரச்சனை எழ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகவே மதம் மாறியவர்களுக்கும், எங்களுக்கும் (மீனவர்களுக்கும்) இடையே நிலவும் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும். இதனை கண்டித்து தான் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகிறோம்" என்றார்.

மேலும், ஒரு சில நபர்களிடம் பேசும் போது, "இரு சமூக மக்களும் நல்லுறவை விரும்புகிறோம். மதம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, இதில் சில அரசியல் கட்சிகள் மூக்கை நுழைக்க பார்க்கிறது. ஆகவே, இரு சமூக மக்களின் இந்த பிரச்சனையை வேறு வழியில் திசை திரும்ப அநேக வாய்ப்பு உள்ளதால், உடனடியாக மாவட்ட நிர்வாகம் நல்ல ஒரு தீர்வு கண்டு இந்த பிரச்னையை முடிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: CM MK Stalin : தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதே திராவிட மாடலின் திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

Last Updated :Oct 3, 2023, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.