ETV Bharat / state

நாங்குநேரி சாதி மோதல் விவகாரம்.. மாணவர்கள் சாதிய வேற்றுமை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வேதனை!..

author img

By

Published : Aug 12, 2023, 11:37 AM IST

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் மாணவர்கள் சாதி மோதல் விவகாரமும், தமிழகத்தின் தற்போதைய நிலைப்பாடும் வேதனை அளிப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

நாங்குநேரி சாதி மோதல் விவகாரம் குறித்து தமிழசை சௌந்தரராஜன் வேதனை
நாங்குநேரி சாதி மோதல் விவகாரம் குறித்து தமிழசை சௌந்தரராஜன் வேதனை

நாங்குநேரி சாதி மோதல் விவகாரம் குறித்து தமிழசை சௌந்தரராஜன் வேதனை

தூத்துக்குடி: தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஆகஸ்ட் 12) சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனை தருகிறது. நோட்டுப் புத்தகம் என்று இருக்க வேண்டிய மாணவர்கள் வெட்டுக்குத்து என்று இருந்திருக்கிறார்கள். அறிவாற்றலை பெற வேண்டிய மாணவர்கள், அரிவாளை தூக்கி இருக்கிறார்கள்.

தவறு எங்கே நடந்திருக்கிறது என்பதை அலசி ஆராய வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். சாதிய வேற்றுமை குறைய வேண்டும் என்று நாம் நினைக்கின்ற நேரத்தில், இன்று சாதிய வேற்றுமை மாணவர்களிடையே அவர்கள் ஒற்றுமையை குலைக்கும் அளவிற்கு, வெட்டுக் குத்து என உயிரை வாங்கும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.

அந்த மாடல் இந்த மாடல் என்று பெருமை பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் ஒரு சில மோதல்கள் இங்கே தடுக்க முடியவில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஓட்டு அரசியல் தாண்டி, கட்சி அரசியலை தாண்டி அனைத்து இயக்கங்களும், பொதுநலவாதிகளும் ஆசிரிய பெருமக்களும் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவரை சில பேர் வெட்டி அவர்கள் வலியை தீர்த்து இருக்கிறார்கள். இது சாதிய கொடுமை என்று மட்டுமே எடுத்துக் கொள்வதா? ஏதோ சில கண்டனங்களும், ஆதரவுகளும் இந்த சூழ்நிலையை மாற்றி விடப் போவதில்லை. பள்ளிகளில் நல்லுரை வகுப்புகள் மேலும் அதிகமாக்கப்பட வேண்டும். அருகில் உள்ள ஒரு ஊரில் 50 குடும்பத்தினர் இதற்கு முன்னால் அந்த ஊரை விட்டு சென்றிருக்கிறதாக தகவல் வருகிறது.

அப்படியானால் அங்குள்ள சூழ்நிலை எப்படி இருக்கிறது. ஏன் காவல்துறை தடுக்க மறுக்கிறார்கள்? தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை. தமிழகத்தில் 40 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள். 50 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் டூ தமிழ் தேர்வுக்கே போகவில்லை. ஆக தமிழை காப்பாற்ற உண்டான வழியை பார்க்க வேண்டும். இந்தியை யாரும் திணிக்கவில்லை.

இந்தியால் யாரும் பாதிப்பு அடையப் போவதில்லை. தமிழில் நீட் எழுதலாம் என்று கூறிய நிலையில், தமிழ் எந்த நிலையில் இருக்கிறது. எந்த அளவு பெருமைப்படுகிறது. எந்த அளவிற்கு உயரப் பிடிக்கப்படுகிறது. மாணவர்கள் எந்த அளவில் தமிழை எடுத்துச் செல்கின்றனர். மேலும், தமிழில் எந்த அளவுக்கு பாடம் எழுதி சிறந்த மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

1967இல் இருந்து இந்தியை வைத்து அரசியல் செய்தாயிற்று. இன்னும் என்ன அரசியல் உங்களுக்கு வேண்டும்? உங்கள் எண்ணத்தில் முன்னேற்றமே வராதா? 10ம் வகுப்பு வரை கட்டாய கல்வியின் முயற்சிகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. தமிழாசிரியர்கள் எந்த அளவிற்கு நியமித்து இருக்கிறீர்கள் என்று உயர்நீதி மன்றம் சொல்லவேண்டிய சூழ்நிலையில் அரசு உள்ளது.

புதுச்சேரியில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கொண்டு வந்தோம். உடனே அதை எதிர்த்தனர். தற்போது சிபிஎஸ்இ-யில் 20 மொழிகளில், மாநில மொழிகள் தமிழிலும் பாட புத்தகங்கள் வந்துவிட்டது. எல்லா விதத்திலும் மத்திய அரசை பொறுத்தமட்டில் மொழி அரசியல் செய்யாமல் இருக்கிறார்கள்.

முதலமைச்சர் சொல்கிறார், தமிழ் என்ற வார்த்தைகள் உச்சரிப்பதற்கு பாரதப் பிரதமருக்கு உரிமையில்லை என்று. இதுவரைக்கும் எந்த பிரதமரும் சொல்லாத அளவிற்கு, உலக அரங்கில் தமிழை உயர்த்திப் பிடித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், தமிழகத்தில் அனேக இடங்களில் பிரச்னைகள் இருக்கிறது, அதை முதலில் பார்க்க வேண்டும். தமிழகத்தைச் சார்ந்தவராக இது எனது கருத்து” எனக் கூறினார்.

இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவம்: 6 சிறார்கள் கைது - பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிகாரிகள் நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.