ETV Bharat / state

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்பிரமணிய சுவாமி..! விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 10:28 PM IST

Tiruchendur Subramania Swamy Temple: கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சியானது திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

Tiruchendur Subramania Swamy Temple
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்பிரமணிய சுவாமி

Thiruchenthur Subramanya Swami temple fest

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் சப்பர பவனி நடைபெற்று வந்தது.

இத் திருவிழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி சஷ்டி விரதம் இருந்து வந்தனர். கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி இன்று (நவ. 18) அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை புரிந்து சஷ்டி விரதம் மேற்கொண்டு கடலில் புனித நீராடி அங்கப்பிரதட்சணம், அடி பிரதட்சணம், செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

இந்நிலையில், மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு கடற்கரைத் திடலில் எழுந்தருளினார். கடற்கரை மைதானத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் தன் முகத்தில் வந்த சூரபத்மனை வதம் செய்த ஜெயந்திநாதர் தொடர்ந்து கஜமுகத்தோடும், சிங்க முகத்தோடும், சேவல் வடிவிலும் வந்த சூரபத்மனை வதம் செய்தார்.

அப்போது கடற்கரையில் கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு "அரோகரா, அரோகரா" என கோஷங்கள் முழங்கி ஜெயந்திநாதரை வணங்கி வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கும் அம்பாளுக்கும் அலங்கார தீபாராதணை நடைபெற்றது.

பின்னர், சூரசம்ஹாரம் முடிவடைந்ததும் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்களின் விரதத்தை முடித்துக் கொண்டனர்.இந்த சுரசம்ஹார நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 3,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் கண்காணித்து வந்தனர்.

மேலும், திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் - தாம்பரம் இடையே கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

இத் திருவிழாவின் நிறைவு நாளான நாளை (நவ.19) திருக்கல்யான நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பல்கலைக்கழக வேந்தர், துணை வேந்தர் நியமன விவகாரம் - சட்டசபை சிறப்பு கூட்டத்தில் காரசார விவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.