ETV Bharat / state

ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

author img

By

Published : May 21, 2021, 7:49 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின்போது பொதுமக்களை சுட்டுப்படுகொலை செய்த காவல் துறை, இதர துறைகளின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமம் குடிமக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

Sterlite protest: Demand for action against officers responsible for the shooting!
Sterlite protest: Demand for action against officers responsible for the shooting!

தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு தினம் சமம் குடிமக்கள் இயக்கத்தால் இன்று (மே 21) அனுசரிக்கப்பட்டது. இந்நினைவு நாளை முன்னிட்டு சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

'தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைச் சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்தி, உயிரைப் பறித்த நாசக்கார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினை நிரந்தரமாக மூடக்கோரி 2018ஆம் ஆண்டு மக்கள் அமைதியான வழியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றபோது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரைக் கொலை செய்தனர். நாட்டையே இச்சம்பவம் உலுக்கியது. வரலாற்றில் பெரிய வடுவை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படுகொலை நடந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் படுகொலை செய்த காவல் துறை, இதர துறை அலுவலர்கள் மேல் துறை ரீதியாகவும் அரசு பெரிய அளவில் நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அமைதியான வழியில் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்ற காவல் துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கையினை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். அப்போது தான் சட்டத்தின் மீதும், அரசின் நிர்வாகத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உருவாகும்.

"ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம்" என முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு மக்களுக்கு ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புப்படி ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான அறிவிப்பினை முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்' என அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.