ETV Bharat / state

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பொருட்கள் சேதம்; 160 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு கோரி மனு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 4:20 PM IST

Special insurance camps in Thoothukudi: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு இதுவரை சுமார் 160 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனங்களை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

special insurance camps in thoothukudi
special insurance camps in thoothukudi

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழை வெள்ளம் காரணமாக, பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் சேதமாகின. மேலும், மாநகரின் பல்வேறு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளும் குளிர் பதனக் கிடங்குகளும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் இழப்பீடு வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை, தி நியூ இந்தியா அசூரன்ஸ் லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC) மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளது.

இந்த முகாமில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள், தங்கள் உடைமைகளுக்கு இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனங்களை அணுகி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்டோர் இழப்பீடு கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுக்களில், சுமார் 140 மனுக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களைச் சரி செய்ய இழப்பீடு கேட்டு வந்துள்ளதாகவும் மேலும், 100-க்கும் மேற்பட்ட இழப்பீடு மனுக்கள் தொழிற்சாலை பாதிப்பு, வீடு பாதிப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 160 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காப்பீடு சிறப்பு முகாமில் மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்து கொண்டு, காப்பீடு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக காப்பீடு வழங்கக் கோரிக்கை விடுத்தார்.

மேலும், பல்வேறு பகுதிகளில் முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காப்பீடு நிவாரணத்திற்கான ஆணைகளையும் அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயகாந்தும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.