ETV Bharat / state

ஆத்தூர் வெற்றிலைக்கு வந்த சோதனை.. கனமழையால் சேதம்.. வாழ்வாதாரம் காக்க விவசாயிகள் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 2:52 PM IST

Athur Vetrilai: தூத்துக்குடியில் பெய்த அதி கனமழையின் காரணமாக புவிசார் குறியீடு பெற்றுள்ள வெற்றிலை கொடிகள் கடும் சேதம் அடைந்துள்ள நிலையில் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Betel vines had been severely damaged Due to heavy rainfall at Thoothukudi
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வெற்றிலை கொடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வெற்றிலை கொடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி பாசனத்தில் விளையும் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. அதிக காரத்தன்மை கொண்ட இந்த வெற்றிலை, தமிழகம் மட்டுமின்றி இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா, பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஆத்தூர் வெற்றிலைக்கு தற்போதுதான் புவிசார் குறியீடும் கிடைத்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பின. அது மட்டுமல்லாது, அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் ஸ்ரீவைகுண்டம், ஆத்துர், ஏரல் ஆகிய பகுதிகள் முற்றிலும் சேதமடந்துள்ளன.

ஆத்தூர் சுற்றுவட்டாரத்தைச் சுற்றி 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. இங்கு வெற்றிலை கொடிகள் ஏக்கர் கணக்கில் உள்ளது. இந்த நிலையில், இந்த மழை நீர் காரணமாக வெற்றிலை கொடிகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இது குறித்து வெற்றிலை விவசாயம் செய்து வரும் லட்சுமணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “புவிசார் குறியீடு பெற்றுள்ள வெற்றிலை, இங்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஏக்கர் வரை உள்ளது. இதற்கு முன் 4 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டோம். அதையடுத்து, நகைகளை அடமானம் வைத்து, வட்டிக்கு பணம் வாங்கி இந்த வெற்றிலையைக் காப்பாற்றி வைத்தோம்.

ஆனால், அன்று ஒரு நாள் பெய்த மழையால், இந்த வெற்றிலை கொடிகள் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. இதனை நம்பியே ஆயிரம் குடும்பங்கள், 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். அனைவரின் வாழ்வதாராமும் பாழடைந்து விட்டது. ஆகவே, அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: வெள்ளம் எப்போ வடியுமோ..? அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவில்லை என தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலைமறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.