ETV Bharat / state

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் 6 கோடி வரை விலை போன ஆடுகள்

author img

By

Published : Jun 24, 2023, 5:25 PM IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையான எட்டையபுரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் சூடுபிடித்த ஆட்டு சந்தை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் சூடுபிடித்த ஆட்டு சந்தை

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரம் ஆட்டுச்சந்தை, தென்மாவட்டங்களில் இன்றளவிலும் புகழ்பெற்ற சந்தையாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், இந்தச் சந்தையில் தங்கள் ஆடுகளை விற்பதற்கும் வாங்கி செல்வதற்கும் ஆண்டாண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வருகிற 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் இன்று (ஜூன்24) வியாபாரிகள் மற்றும் வாங்குபவர்கள் ஏராளமானோர் என சந்தை களைகட்டியது. செம்மறி ஆடு, வெள்ளாடு, குறும்பாடு, கொடி ஆடு உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தையில் ஆட்டின் விலை எப்போதும் இல்லாத வகையில், 6 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை போன நிலையில், மொத்தம் சுமார் 6 கோடி ரூபாய்க்கு மேல் அமோகமாக விலைபோனதால் ஆட்டு வியாபாரிகளிடம் ஆடு விற்பனை சூடுபிடித்தது. பக்ரீத் பண்டிகை என்பதால் இன்று சந்தை களைகட்டிய நிலையில், 6 கோடிக்கும் மேல் விற்பனை நடைபெற்றது வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அன்னூர் ஆட்டுச் சந்தையிலும், பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஒரே நாளில் 2 கோடி ருபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில், விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர். அன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

வாரந்தோறும் சனிக்கிழமை நாட்களில் நடைபெறும் அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். பக்ரீத் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், இன்று, அன்னூர் சந்தையில் அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.

விவசாயிகள் ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னூர் ஆட்டுச் சந்தையில் வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஆடும் அதற்கேற்றவாறு விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் இன்று காலையில் துவங்கிய ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரிசல் வட்டார இலக்கிய ஆய்வு மையம் தொடங்க வேண்டும் - எழுத்தாளர் உதயசங்கர் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.