ETV Bharat / state

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில், இளநிலை பட்டப்படிப்புகளுக்குப் பொது நுழைவுத்தேர்வு

author img

By

Published : Mar 30, 2022, 8:14 PM IST

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுநுழைவுத்தேர்வு குறித்து, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பல்கலை
பல்கலை

சென்னை: பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் 2009ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்தப் பல்கலைக்கழகம் 7 ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளையும், 23 முதுகலைப் பட்டப்படிப்புகளையும், 28 ஆராய்ச்சிப் படிப்புகளையும் வழங்குகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே பொது நுழைவுத் தேர்வின் மூலம் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

2022-2023ஆம் கல்வி ஆண்டுக்குரிய இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET - 2022) தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது. இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்குரிய சேர்க்கைக்கான (CUET (UG) - 2022) பொது அறிவிப்பு https://cutn.ac.in/admissions-2022-2023/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைந்த இளங்கலை அறிவியல் கல்வியியல் கல்வி - கணிதம் (பி.எஸ்சி., பி.எட்.) (நான்கு ஆண்டுகள்), ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் – வேதியியல் (எம்.எஸ்சி) (ஐந்து ஆண்டுகள்), ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் - உயிரி தொழில்நுட்பவியல் (எம்.எஸ்சி.,) (ஐந்து ஆண்டுகள்), ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் - கணிதம் (எம்.எஸ்சி.,) (ஐந்து ஆண்டுகள்), ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் - இயற்பியல் (எம்.எஸ்சி.,) (ஐந்து ஆண்டுகள்), ஒருங்கிணைந்த முதுகலைப் பொருளாதாரம் (எம்.ஏ.,) (ஐந்து ஆண்டுகள்), ஒருங்கிணைந்த முதுகலை நிகழ்த்துக்கலை - இசை (எம்.பி.ஏ.,) (ஐந்து ஆண்டுகள்), இளங்கலை அறிவியல் - ஜவுளி (பி.எஸ்சி.,) (மூன்று ஆண்டுகள்) (கோயம்புத்தூரில் உள்ள SVPISTM நிறுவனத்தில் வழங்கப்படுகிறது), இளங்கலை அறிவியல் - ஜவுளி தொழில் நுட்பவியல் (பி.எஸ்சி.,) (மூன்று ஆண்டுகள்) (கோயம்புத்தூரில் உள்ள SVPISTM நிறுவனத்தில் வழங்கப்படுகிறது), இளங்கலை - ஜவுளி வணிகப் பகுப்பாய்வு - (பிபிஏ) (மூன்று ஆண்டுகள்) (கோயம்புத்தூரில் உள்ள SVPISTM நிறுவனத்தில் வழங்கப்படுகிறது)

மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலைப் பட்டப் படிப்புக்களுக்கான பொது நுழைவுத் தேர்வு, தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் நடத்தப்படும். இந்தத் தேர்விற்கான வினாக்கள் கொள்குறி வினா அடிப்படையில் அமைந்திருக்கும். விண்ணப்பிப்பதற்கான இணையதளம் (https://cuet.samarth.ac.in/) 2.4.2022 முதல் 30.4.2022 வரை திறந்திருக்கும். முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கான (CUET (PG) – 2022) பொது அறிவிப்பு, தேசியத் தேர்வு முகமையால் (NTA) தனியாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது நுழைவுத் தேர்வால் பல்வேறு பயன்கள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள எந்த மத்தியப் பல்கலைக்கழகத்திலும் விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுக்க இந்த பொது நுழைவுத்தேர்வு பயனுள்ளதாக இருக்கும். தொழில்முறை படிப்புகள் தொடங்கி அறிவியல், கலை மற்றும் தொழிற்கல்வி வரையிலான பல்வேறு படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பல பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க முடியும். மற்ற தேர்வுகளின் தேதிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதைத் தவிர்க்கும்.

தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதால், அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்கு, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சம வாய்ப்புகளை வழங்கும். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விண்ணப்பதாரர்கள் ஒரு தேர்வை மட்டுமே எழுத வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் செய்முறைத் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.