ETV Bharat / state

திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி பலமாக உள்ளது - திருமாவளவன்

author img

By

Published : Mar 3, 2023, 4:49 PM IST

'திமுகவிற்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே விரிசலையும், முரண்பாட்டையும் உருவாக்க வேண்டும் என சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அதற்கு வாய்ப்பில்லை; திமுகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பலமான கூட்டணியில் உள்ளது' என திருமாவளவன் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

திமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி பலமாக உள்ளது - திருமாவளவன்

திருவண்ணாமலை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திருவண்ணாமலை சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ''நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், திமுக தலைவர் கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார்'' என கூறினார்.

மேலும் அவருடைய துணிச்சலான இந்த நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தை கட்சி பாராட்டுவதாகவும், திமுக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்றார்.

பாஜக தலைமையிலான சனாதன சக்திகளை 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்கான வியூகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தனது பிறந்தநாள் உரையில் அழுத்தமாக குறிப்பிட்டார் எனவும், காங்கிரஸ் அல்லாமல் ஒரு கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணி கரையேறாது எனவும் தெரிவித்தார்.

மேலும் மம்தா பானர்ஜி தனித்துப்போட்டியிடுவோம் என்று அறிவித்தது இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனவும்; முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களை நேரில் சந்தித்து தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகளை தெரிவித்து, அனைத்து பாஜக எதிர்ப்புச் சக்திகளும் ஓரணியில் திரண்டு அவர்களை வீழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாக பேச வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

திமுகவிற்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே விரிசலையும், முரண்பாட்டையும் உருவாக்க வேண்டும் என சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும், அதற்கு வாய்ப்பில்லை என்றும்; திமுகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பலமான கூட்டணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 'பாமகவினர் அண்மையில் முதலமைச்சரை சந்தித்துப் பேசியதால் தான் அச்சப்படுவதாகவும் கலக்கமடைவதாகவும் கூறுகின்றனர். முதலமைச்சர் என்ற முறையில் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். குறிப்பாக பிரதமரை தான் சந்திப்பதால் பாஜகவுடன் இணைவதாக அர்த்தம் இல்லை. பாமகவிற்கு ஒரு கலாசாரம் உண்டு. கூட்டணியில் இருக்கும்போது அடுத்த தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எந்தக் கூட்டணியில் இருந்தார்களோ அந்த கூட்டணியில் இருந்து சற்று விலகி நிற்பார்கள்.

இதற்குக்காரணம் கூட்டணிக்கு தலைமை தாங்குகின்ற இரண்டுத் தலைவர்களுக்கும் பாமக சார்பில் இந்த பக்கமும் பேச முடியும்; அந்தப் பக்கமும் பேச முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிப்பதாகவும், இதற்கு காரணம் பேரத்தை அதிகரிப்பதற்காக தான்' என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், 'தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகி நிற்கின்றனர். மேலும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர். அதிமுக கூட்டணியில் தாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று திமுக கருதத் தேவையில்லை. திமுகவிற்கும் நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம் என்ற சமிக்ஞை தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

திமுகவுடன் பேசிக்கொண்டு அதிமுகவில் பேரத்தைக் கூட்டுவது, அதிமுகவுடன் பேசிக்கொண்டு திமுகவில் பேரத்தைக் கூட்டுவது இது அனைத்தும் பாமகவின் தேர்தல் தந்திரம். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தை உணர்த்துவதாக நம்புகிறேன். திமுக தலைமையிலான கூட்டணி அகில இந்திய அளவில் வழிகாட்டக்கூடிய வலிமை பெற வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வெற்றியை வழங்கி உள்ளனர்.

மேற்கு மாவட்டம் என்றாலே திமுகவிற்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக இருக்காது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், அவை அனைத்தையும் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து பொய்யாக்கி உள்ளனர்' எனத் தெரிவித்தார்.

மேலும், 'பாஜக அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கில் கட்சி நிதி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளார்கள். தங்கள் கையில் ஆட்சி இருக்கிறது என்ற வகையில் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். யாரிடம் கட்சி நிதி பெற்றார்களோ அவர்களுக்கு பாஜக அரசு ஒப்பந்தப் பணிகளை வழங்குகின்றனர்.

குறிப்பாக அம்பானி, அதானி போன்றவர்களுக்கு ஒப்பந்தப் பணிகளை இந்திய அளவில் வழங்கி பணத்தை கொள்ளையடிக்கின்றனர். 8 ஆண்டுகள் கால பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி ஆகியோர் உலக பணக்காரர்களாக வளர்ந்துள்ளனர்.

அம்பானி, அதானி என்ற இரண்டு நபர்களும் மோடி அமித்ஷா ஆகிய இரண்டு நபர்களால் வளர்ந்துள்ளனர். அனைத்து பொது சொத்துகளும் சூறையாடப்பட்டு தனியாருக்கு தாரைவார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி கடுமையாக ஏறிக்கொண்டே போய்கிறது.

குறிப்பாக சமையல் எரிவாயு விலையை தற்போது உயர்த்தியுள்ளனர். மக்களுக்கான ஆட்சி நிர்வாகத்தை நடத்தவில்லை. அம்பானி, அதானி ஆகிய இரண்டு நபர்களுக்காக மத்திய அரசு ஆட்சி நடத்துகிறது'' எனக் கூறினார்.

இதையும் படிங்க: தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.