ETV Bharat / state

பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு மேலும் 2 அடி அதிகரிப்பு.. பணிகளை துவக்கிய பொதுப்பணித்துறை!

author img

By

Published : Feb 18, 2023, 7:59 AM IST

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு அளவை 2 அடி உயர்த்தும் பணி தொடங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. ரூ.65 லட்சம் செலவில் 1939-ல் நீர்த்தேக்க கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி, பூண்டி ஏரியைக் கட்ட பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆகையால் இந்த நீர்தேக்கத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.

தற்போது பூண்டி ஏரி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. 8458 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நீர் தேக்கத்தின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். மீதமுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீர்த்தக்கத்தில் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் நீர் திறந்து விடப்படும். கடந்த டிசம்பர் மாதம் திருவள்ளூரில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்ததால் ஏரி முழுவதுமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. ஆகையால் உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் கலந்தது. ஆகையால் அணையை இரண்டு அடி உயர்த்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பூண்டி ஏரியை ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: தென் மாவட்ட சிறப்பு ரயில்கள் மூலம் வசூலை அள்ளிய தெற்கு ரயில்வே!

இந்நிலையில் அவர், உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க ஏரியின் உயரத்தை இரண்டு அடி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பூண்டி நீர்த்தேக்கத்தை 2 அடி உயர்த்துவதற்காக அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டது. மேலும் ஏற்கனவே நீர்த்தேக்கத்தில் 3.231 டி.எம்.சி அளவு வரை நீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இருக்கிறது. தற்போது 1½ டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க ஏதுவாக நீர்த்தேக்கத்தை மேலும், 2 அடி உயரம் அதிகரிப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்காக தமிழ்நாடு அரசு ரூ.550 கோடி ஒதுக்கியது. நீர்தேக்கத்தை இரண்டு அடி உயரம் வரை உயர்த்துவதற்காக கரையின் வெளிப்புறம் மற்றும் கரையின் கீழ் மண் தன்மை குறித்தும் 6 பகுதிகளில் நவீன கருவிகளைக் கொண்டு மண்ணை பரிசோதிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நிலக்கடலையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.