ETV Bharat / state

தப்பு பண்ணுனவங்களை கூட விட்டுடுவேன்! ஆனால் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பலைனா விட மாட்டேன்!

author img

By

Published : Apr 18, 2023, 1:16 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தின் திடீர் நகர் பகுதிகளை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை நேரில் சந்தித்த உதவி ஆய்வாளர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை விளக்கி பெற்றோர் மனதை மாற்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தார். உதவி ஆய்வாளரின் இந்த செயல் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

sub inspector pleading with parents to send their children to school that video going viral on social media
குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்புமாறு உதவி ஆய்வாளர் ஒருவர் பெற்றோரிடம் கெஞ்சி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்புமாறு உதவி ஆய்வாளர் ஒருவர் பெற்றோரிடம் கெஞ்சி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த பெண்ணாலூர் பேட்டை அருகே உள்ள திடீர்நகர் என்ற பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 11 பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் பரமசிவம் அந்த கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் படி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். மேளும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி உதவி ஆய்வாளர் பேசிய வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் உதவி ஆய்வாளர், “ குழந்தைகளின் படிப்பை நீங்களே கெடுக்கலாமா? உங்கள் யாருக்காவது உதவி வேண்டுமென்றால் என்னை போலீஸ் ஸ்டேஷனில் வந்து பாருங்கள்.

குழந்தைகளுக்கு பீஸ் கட்ட வேண்டும், சாப்பாடு கஷ்டம், வீட்டுக்காரர் தொந்தரவு என எந்த ஹெல்ப் வேண்டுமென்றாலும் ஸ்டேஷனில் வந்து என்னை பார்க்கலாம். 24 மணி நேரமும் எங்கள் ஸ்டேஷன் கதவு திறந்தே இருக்கும். ஆனால் ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்கள், உங்கள் வீட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.

இப்பொழுது பள்ளிகளில் 5 நாட்களுக்கு முட்டை, பயறு, சாப்பாடு போடுகிறார்கள். உங்களுக்கு எந்த உதவு வேண்டுமானாலும் கேளுங்கள், நான் யார் கையில் காலில் விழுந்தாவது உங்களுக்கு உதவுகிறேன். பிள்ளைகளை படிக்க வைய்யுங்கள், இல்லையேல் குழந்தைகள் வளர்ந்து நாளை கேட்பார்கள் என்னை ஏன் படிக்க வைக்கவில்லை என்று. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்.

சர்வ சிக்‌ஷா அபியான் (SSA) திட்டம் என்று ஒன்று உள்ளது. இது மத்திய அரசு திட்டம். 14 வயது வரை குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என திட்டம் உள்ளது. அந்த திட்டத்தின்படி குழந்தைகளை கல்வி கற்க பள்ளிகளுக்கு அனுப்பவில்லை என்றால் அதில் குழந்தைகள் இல்லை அவர்கள் அப்பா அம்மா தான் குற்றவாளிகள்.

நான் இந்த விஷயத்தை விடவே மாட்டேன். ஒரு திருடனை கூட விட்டுவிடுவேன், கொலைகாரனை கூட விட்டுவிடுவேன், ஏனென்றால் அவர்களை இன்று இல்லை என்றால் நாளை பிடித்து விடுவேன். குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு விடாமல் இருப்பது குழந்தைகளுக்கு விஷம் கொடுப்பது போன்றது. நாளைய சமுதாயத்தை கருவறுப்பது போன்றது. தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். தப்பான மூடநம்பிக்கையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு எந்த உதவி என்றாலும் ஸ்டேஷனில் வந்து கேளுங்கள். இங்கிருந்து கூப்பிடும் தூரத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. குழந்தையை கிளப்பி பள்ளிக்கு அனுப்புங்கள் என உதவி ஆய்வாளர் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. உதவி ஆய்வாளர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பேசியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதள பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், “குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்.” என பதிவிட்டிருந்தார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, “இப்படிப்பட்ட போலீசார் தான் நாட்டுக்குத் தேவை. இந்த போலீசாருக்கு Hats off. இவர் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தையும் விளக்கியுள்ளார். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு செக்.. அரசின் அதிரடி உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.