ETV Bharat / state

ஓடும் பேருந்தில் பிட்பாக்கெட்; 7 சவரன் நகையைத் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த ரஜினிக்கு அடி உதை!

author img

By

Published : Jun 28, 2023, 8:16 PM IST

திருத்தணியில் ஓடும் பேருந்தில் பிட்பாக்கெட் அடித்து 7 சவரன் நகையை திருடிய ஆந்திராவை சேர்ந்தவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

7 சவரன் நகையைத் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த ரஜினிக்கு தர்மஅடி - போலீசார் விசாரணை

திருவள்ளூர்: ஓடும் பேருந்தில் பயணியின் உள்ளாடைக்குள் இருந்த 7 சவரன் நகைகளை பிளேடு மூலம் உள்ளாடையை கிழித்து திருடிய ஆந்திராவை சேர்ந்தவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பைபாஸ் பகுதியில் ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று (ஜூன் 28) வந்து கொண்டிருந்தது. அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சுந்தரம், அவரது மனைவி கிருஷ்ணம்மாள் இவர்கள் அரக்கோணத்தில் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இந்தப் பேருந்தில் வந்துள்ளனர்.

இந்த நிலையில், திருத்தணி பைபாஸ் பகுதியில் உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு மற்றொரு பேருந்தில் ஏறலாம் என்று வந்த சுந்தரம் மனைவியுடன் தனியார் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது இவரது பாக்கெட்டில் வைத்திருந்த 7 சவரன் நகைகள் இருப்பதை உறுதி செய்வதற்காக பாக்கெட்டில் கை வைத்துள்ளார். ஆனால், தனது பாக்கெட் ஓட்டையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனிடையே, இவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு நபர் வேகமாக பேருந்திலிருந்து இறங்கி ரயில் நிலையம் நோக்கி நடந்துள்ளார். அப்போது, அவரைக் கண்டவுடன், 'அதோ செல்கிறான் அவன்தான் என் பின்னால் அமர்ந்திருந்த நபர்.. அவன் தான் எனது பாக்கெட்டில் இருந்த நகையைத் திருடி இருப்பான்' என்று சுந்தரம் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக பைபாஸ் பகுதியில் இருந்த பொதுமக்கள் சுந்தரத்திடமிருந்து பிக்பாக்கெட்டுடன் தப்பியோடிய திருடனை மடக்கிப் பிடித்தனர். அத்தோடு, அவனிடமிருந்த சுந்தரத்தின் 7 சவரன் நகைகளையும் பொதுமக்கள் மீட்டனர்.

தங்கச் சங்கிலி, தங்க வளையல் இவை அனைத்தையும் திருமணத்திற்குச் செல்வதற்கு முன்பு, தனது மனைவியின் கழுத்தில் போடாமல் பத்திரமாக பாக்கெட்டில் இருக்கட்டும் என்று அவர் வைத்திருந்துள்ளார். அப்போது சுந்தரத்தின் பாக்கெட்டில் இவ்வாறு நகைகள் இருப்பதை அறிந்து அவரது பின்னால் அமர்ந்திருந்து பிளேடால் உள்ளாடையை அறுத்து திருடியதாக பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததும் ஒப்புக்கொண்டான். மேலும், பிடிபட்ட திருடன் ஆந்திர மாநிலம், திருப்பதி அருகில் உள்ள ரேனிகுண்டா பகுதியைச் சேர்ந்தவன் என்றும்; அவன் பெயர் ரஜினி என்பது தெரியவந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருடன் ரஜினியை பிடித்துச் சென்றனர். நகையை சுந்தரத்தின் மனைவி கிருஷ்ணம்மாளிடம் ஒப்படைத்தனர். இதனால் திருத்தணி அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: Tambaram: மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 2 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.