ETV Bharat / state

ஓய்ந்த கனமழை.. நெல்லையில் ரயில் சேவை சீரானது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 9:48 AM IST

Tirunelveli Trains: நெல்லையில் பெய்து வந்த கனமழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதால், ரயில் சேவைகளும் துவங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

நெல்லையில் பெய்து வந்த கனமழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதால், ரயில் சேவைகளும் துவக்கம்

திருநெல்வேலி: வளிமண்டல சுழற்சியின் காரணமாக நெல்லையில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்ட நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் குளம் போல் தேங்கிய தண்ணீரால், நெல்லையிலிருந்து செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

ஆனால், தற்போது மழை நின்று இயல்பு நிலை திரும்பியதால், இன்று (டிச.20) அதிகாலை 2 மணி முதல் நெல்லையில் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. மதுரையில் இருந்து தென்பகுதி மார்க்கமாக வரும் ரயில்கள் காலை முதல் வர துவங்கின. குறிப்பாக, சென்னை-நெல்லை அதிவிரைவு ரயில் இன்று காலை சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

மேலும், நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 7.30 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்தது. அதேநேரம், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் முன்பாக தேங்கியிருக்கும் நீரானது முழுவதுமாக வடியாத காரணத்தினால், பயணிகள் மாற்றுப்பாதையில் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், தபால் மற்றும் பார்சல் சர்வீஸ் ஆகியவை வழக்கமான முறையில் இயங்கி வருகின்றன. அதேநேரம் திருநெல்வேலி, திருச்செந்தூர் ரயில் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் தென்காசி - நெல்லை இடையே ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்து ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருநெல்வேலி யார்டு மாலை 5.20 மணிக்கு இயக்கத்திற்கு ஏற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, திருநெல்வேலி வழியாக ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.

அதேபோல், தேங்கிய நீரை அகற்றி மறுசீரமைப்புப் பணிகளை முடித்த பின்னரே ரயில் இயக்கங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றன. மேலும், 20924 என்ற எண் கொண்ட காந்திதாம் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 11.05 மணிக்கு மறுசீரமைக்கப்பட்ட பிறகு, திருநெல்வேலிக்குச் செல்லும் முதல் ரயில் ஆகும்.

மீட்கப்பட்ட பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மணியாச்சிக்கு நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்ட சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் இன்று காலை 10.15 - 10.45 மணி வரை தற்காலிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் செங்கல்பட்டு வந்தவுடன் நேரம் மேலும் புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் மத்தியக் குழுவினர் நாளை (டிச.20) ஆய்வு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.