ETV Bharat / state

திமுக தலைவர் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து கூறுவது இல்லை?: உண்மையை உடைத்த சபாநாயகர் அப்பாவு

author img

By

Published : Mar 6, 2023, 3:26 PM IST

தீபாவளிக்கு திமுக தலைவர் ஏன் வாழ்த்து கூறுவதில்லை? என்ற கேள்விக்கு 'திமுக எப்போதும் வதம் செய்பவர்களுக்கு எதிராகவும் சாதி, சனாதன அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இயக்கமாக இருப்பதால் தான் தீபாவளிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து சொல்வது கிடையாது' என சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திமுக தலைவர் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து கூறுவது இல்லை?: உண்மையை உடைத்த சபாநாயகர் அப்பாவு

நெல்லை: ஒவ்வொரு ஆண்டும் வரும் பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தினங்களில் பொதுமக்களுக்கும், இத்தகைய பண்டிகைகளைக் கொண்டாடுவோருக்கும் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பது வழக்கம். அதன்படி, நாட்டின் குடியரசு தலைவர், அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள், அந்தந்த மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்த வண்ணம் உள்ளது.

இதனிடையே மு.க.ஸ்டாலின் ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தினங்களுக்கு மட்டும் வாழ்த்துகள் கூறுவதுடன், இந்து பண்டிகைகளை முதலமைச்சராகிய பின்னும் கூட வேண்டுமென்றே புறக்கணிப்பதற்காக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கேள்வியெழுப்பி குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, சபாநாயகர் அப்பாவு நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விளக்கியுள்ளார். நெல்லை மாவட்டம், பணகுடி அடுத்த ரோஸ்மியாபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போட்டியின் இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். பின்னர், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் மேடையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, 'தமிழ்நாட்டில் திமுக சாமானிய மக்களை பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 'இங்கு ஒரு சிலர் தீபாவளிக்கு வாழ்த்துக்களை ஏன் திமுக கூறுவதில்லை? என கேட்பார்கள். அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். திமுக எப்போதும் வதம் செய்பவர்களுக்கு எதிராகவும் சாதி, சனாதன அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இயக்கமாக இருப்பதால் தான் தீபாவளிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து சொல்வது கிடையாது.

அதனால்தான் கருணாநிதியும் சொன்னது கிடையாது. ஆனால், 'அய்யா வைகுண்டர்' கடவுள் அவதாரமாக அன்பை மையமாக வைத்து 'எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் சமம்' என முதலாவதாக சொன்னது அய்யா வைகுண்டர் தான். சமூக நீதிக்கு யார் இறைவன் என்றால் அது அய்யா வைகுண்டர் தான்.

அவர்தான் 'கடவுள்' எங்கே இருக்கிறார் என கேட்டதற்கு உன்னிலும் உள்ளார்; என்னிலும் உள்ளார். நம் எல்லோரிலும் கடவுள் உள்ளார் என்றார். அதனால் தான், அய்யா வைகுண்டர் பிறந்த நாளைக்கு மட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துகளைக் கூறினார்' என்று விளக்கினார். திமுக இந்து பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து கூறுவது இல்லை? என்ற கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு இவ்வாறாக, புது விளக்கமளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அனைத்து கோயில்களிலும் சகஜமாக சென்று பக்தியுடன் அர்ச்சனைகள் வழிபாடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமூக நலத்துறை தேவையில்லாததா..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.