ETV Bharat / state

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் - வனத்துறையிடையே பனிப்போர்? ஆட்சியரை விமர்சிக்கிறதா வனத்துறை?

author img

By

Published : Aug 21, 2023, 2:16 PM IST

சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதி வழங்கிய விவகாரத்தின் மாவட்ட நிர்வாகத்திற்கும் வனத்துறைக்கும் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வனப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட தூய்மைப் பணியை விமர்சிப்பது போல், வனத்துறையினர் அகற்றப்படாத குப்பைகளின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Sorimuthu Ayyanar Temple devotees permission issue forest department share images like criticize collector
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியரை விமர்சிக்கும் வகையில் வனத்துறையினர் பகிரும் புகைப்படங்களால் சர்ச்சை

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு வனப்பகுதியில், புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. நெல்லை மணிமுத்தாறு அருகே சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்.

ஆடி அமாவாசை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பே பக்தர்கள் குடும்பத்தோடு வந்து வனப்பகுதியில் குடில் அமைத்து தங்குவார்கள். அதேசமயம் வன பாதுகாப்பு சட்டங்களை காரணம் காட்டி கடந்த சில ஆண்டுகளாக மேற்கண்ட சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் கடும் கெடுபிடி விதித்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனராக பணிபுரிந்து வரும் செண்பக பிரியா பொறுப்பேற்றது முதல், பொதுவாகவே வனப்பகுதியில் பொதுமக்கள் செல்ல பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவின் போது பக்தர்களுக்கு வனத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு கடந்த 16ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக, மூன்று தினங்கள் மட்டுமே வனப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள், தனியார் வாகனங்கள் ஒரு நாள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும் என வழக்கம் போல் துணை இயக்குனர் செண்பக பிரியா பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தார்.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் வனத்துறையை கண்டித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாக சொரிமுத்து அய்யனார் கோயில் தெய்வங்களை விட துணை இயக்குனர் செண்பக பிரியா அதிக அதிகாரம் படைத்தவராக உள்ளார். எனவே அவரது வீட்டின் முன்பு இந்த ஆண்டு பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் ஆட்சியரின் உதவியை பொதுமக்கள் நாடினர். எனவே மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழக்கம்போல் ஐந்து நாட்கள் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கொடுங்கள், மற்றபடி வாகனங்கள் செல்வதில் கட்டுப்பாடு விதித்து கொள்ளுங்கள் என வனத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளார். அதே சமயம் மத்திய வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி என்பதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை பொருட்படுத்தாமல் வனத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து திட்டமிட்டபடி மூன்று நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனால் கடும் கோபம் அடைந்த ஆட்சியர் கார்த்திகேயன் அதிரடியாக தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பக்தர்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போல் ஐந்து நாட்கள் தங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். கோயில் அமைந்திருப்பது வனப்பகுதி என்றாலும் மாவட்ட ரீதியாக தனது கட்டுப்பாட்டில் இருப்பதால் உங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொள்ள முடியாது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் நான் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ஆட்சியர் வனத்துறை அதிகாரிகளை கடுமையாக கடிந்து கொண்டதாக கூறப்பட்டது.

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த ஆண்டும் வழக்கம் போல் பக்தர்கள் ஐந்து நாட்கள் தங்கி இருந்து நிம்மதியாக திருவிழாவை கண்டு ரசித்தனர். இது வனத்துறை அதிகாரிகளுக்கு ஆத்திரத்தையும் அதே சமயத்தில் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது. ஐந்து நாட்கள் அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல் ஆட்சியர் கார்த்திகேயன் அமாவாசை திருவிழா அன்று இரவில் நேரடியாக கோவிலுக்கு சென்று திருவிழாவை கண்டு களித்தார்.

மேலும் திருவிழா முடிந்த பிறகு வனப்பகுதியில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியையும் தொடங்கி வைத்தார். இதனால் சொரிமுத்து அய்யனார் கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆட்சியர் கார்த்திகேயனுக்கு நல்ல பெயர் ஏற்பட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத வனத்துறை அதிகாரிகள் தற்போது மாவட்ட ஆட்சியரை விமர்சனம் செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, சமீபத்தில் ஆட்சியர் சொரிமுத்து அய்யனார் கோயில் வனப்பகுதியில் பக்தர்களால் போடப்பட்ட குப்பைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததை கிண்டல் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதாவது ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியில் குறைபாடுகள் இருப்பதாகவும், தொடர்ந்து அங்கு ஏராளமான குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், வெறும் விளம்பரத்திற்காகவே ஆட்சியர் தூய்மை பணியில் ஈடுபட்டதை போன்று சித்தரிக்கும் நோக்கோடு குப்பைகள் இருக்கும் புகைப்படத்தை வனத்துறை அதிகாரிகள் தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இடையேயான பனிப்போர் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இதையும் படிங்க: சாலையை கூலாக கடந்து செல்லும் சிறுத்தை புலி... வாகன ஓட்டிகள் பீதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.