ETV Bharat / state

இந்து முன்னணித் தலைவரை கொல்ல முயற்சி: 7 பேர் கைது

author img

By

Published : Feb 9, 2022, 9:15 AM IST

நெல்லையில் இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவரை கூலிப்படையை ஏவி கொலைசெய்ய முயற்சித்த விவகாரத்தில் கிராம நிர்வாக உதவியாளர் உள்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவரைக் கொலை செய்ய கூலிப்படை ஏவி முயற்சி
இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவரைக் கொலை செய்ய கூலிப்படை ஏவி முயற்சி

நெல்லை: பாபநாசம் அடுத்த அனவன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவராகப் பதவி வகித்துவருகிறார்.

கூலிப்படையை ஏவி கொலை முயற்சி

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு பால்ராஜ் தனது நண்பர் ராமகிருஷ்ணனுடன் அனவன் குடியிருப்புப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது மிளகாய்ப் பொடி தூவி அவரைக் கொலைசெய்ய முயற்சித்துள்ளனர்.

அப்போது, அவர் கூச்சலிடவே பால்ராஜின் செல்போனைப் பறித்துக்கொண்டு அக்கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து பால்ராஜ் வி.கே. புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்படி இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் காவல் துறையினர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கிராம உதவியாளர் ஒருவர்தான் கூலிப்படையை ஏவி பால்ராஜ் கொலைசெய்ய முயற்சித்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முக்கூடலைச் சேர்ந்த இமானுவேல் ஞான பிரவீன் (19) என்பவரை விசாரணை செய்ததில் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் அடைச்சாணியைச் சேர்ந்த தலையாரி (கிராம நிர்வாக உதவியாளர்) முத்துக்குமார் (32) என்பவரைப் பற்றி பால்ராஜ் அடிக்கடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

விசாரணையில் கைது

தனக்குத் தெரிந்த நபர்களை வைத்து அடித்துக் கொலை மிரட்டல்விடுத்தது விசாரணையில் அம்பலமானது. வழக்கில் சம்பந்தப்பட்ட முத்துக்குமார், அம்பை ஊர்க்காடையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (40), நத்தன்தட்டையைச் சேர்ந்த கதிர்வேல் (27), முக்கூடலைச் சேர்ந்த இமானுவேல் ஞான பிரவீன் (19), சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சேர்ந்த சுபிஷ் என்ற சுரேஷ், பத்தல்மேட்டைச் சேர்ந்த வேல்துரை (எ) பார்த்திபன் (26), பாப்பாகுடியைச் சேர்ந்த மகேஷ் (31) ஆகிய ஏழு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.