ETV Bharat / state

உணவு டெலிவரி ஊழியர் வெட்டி கொலை, வீட்டை சூறையாடிய ஊர் மக்கள்; நெல்லையில் பரபரப்பு!!

author img

By

Published : Aug 3, 2023, 3:37 PM IST

Updated : Aug 3, 2023, 3:57 PM IST

உணவு டெலிவரி நிறுவன ஊழியரை கொலை செய்தவரின் வீட்டை, உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது

nellai murder
Etv Bharat

உணவு டெலிவரி ஊழியர் வெட்டி கொலை, வீட்டை சூறையாடிய ஊர் மக்கள்; நெல்லையில் பரபரப்பு!!

நெல்லை: கொக்கிரகுளத்தை அடுத்த கீழ வீரவராகபுரத்தைச் சேர்ந்தவர், முகேஷ். இவருக்கு சுபிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு(ஆகஸ்ட் 2) பணியை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். அப்போது குருந்துடையார்புரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சுடலை மாடசாமி கோயில் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் முகேஷை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடம் வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் தலைமையிலான போலீஸார், முகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முகேஷ் மனைவி சுபிதா பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில் தங்கள் குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னக்குட்டி என்பவர் குடும்பத்திற்கும் இருந்த முன்விரோதம் காரணமாகவும், அடிதடி சம்பவம் தொடர்பான வழக்கு காரணமாகவும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் உயிரிழந்த முகேஷின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், கொலையாளிகள் என சந்தேகப்பட்ட சின்னக்குட்டி மற்றும் அவர்களது சகோதரர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவர்கள் யாரும் வீடுகளில் இல்லாத நிலையில் கொலைக்கு இவர்கள் தான் காரணம் என ஆத்திரமடைந்து அவர்களது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் முகேஷின் உறவினர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காமராஜர்புரம், கீழவீரராகவபுரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "விடியா மூஞ்சி ஆட்சியில் 25% கமிஷன்" - திமுக அரசை விளாசிய டிடிவி தினகரன்!

Last Updated : Aug 3, 2023, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.