ETV Bharat / state

"பாஜக ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ஊழல்" - கே.பாலகிருஷ்ணன் பகீர் புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 3:31 PM IST

Updated : Aug 23, 2023, 3:42 PM IST

பாஜக அரசு 9 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ஊழல் செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

பேட்டியளித்த கே. பாலகிருஷ்ணன்
பேட்டியளித்த கே. பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு

திருநெல்வேலி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நெல்லையில் அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து மாணவன் உடல்நலம் பெற செய்திருப்பதாக கூறி மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது சகோதரனை தாக்க வந்தவர்களிடமிருந்து வீரத்தோடு காத்த சிறுமிக்கு தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு வீர தீர செயலுக்கான விருதினை வழங்கிட வேண்டும். ஜாதியை ஒழிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன் வரவேண்டும் என்று வலியுறுத்தினார். பெரியார் காலத்தில் ஜாதி ஒழிப்பு குறித்து தீவிரமாக பேசிய திராவிட கட்சிகள் இன்று ஜாதி ஒழிப்பு குறித்து பேசுவதில்லை.

தமிழ்நாட்டில் பெரிய சிறிய கட்சிகள் வாக்கு வங்கிக்காக ஜாதி எதிர்ப்பை கையில் எடுப்பது இல்லை. நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பும் பல்வேறு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் கூறினார். தென் மாவட்டங்களில் மட்டும் ஜாதிய பிரச்சினைகள் அதிக அளவில் நடைபெறுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும்.

மேலும், ஊழல் குறித்து பல்வேறு கருத்துக்களை பேசி வரும் பாஜக தற்போது சிஏஜி (CAG - Comptroller and Auditor General) அறிக்கையின் மூலம் 9 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ஊழல் செய்திருப்பது வெளிவந்திருப்பதாக விமர்சனம் செய்தார். சிஏஜி அறிக்கையில் துவாரகா சாலை அமைப்பதில் முறைகேடு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதாகவும் சிஏஜி அறிக்கையில் முறைகேடு நடைபெற்றிருப்பதை தான் சுட்டிக்காட்ட முடியும் என்றும் கூறினார்.

ஆனால் அவர்கள் அதை ஊழல் என்று குறிப்பிட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். உத்திரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது குறித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், அவரது மரியாதையை அவரே குறைத்துக் கொண்டுள்ளார். சந்நியாசிகள், மடாதிபதிகளின் காலில் விழுந்து தான் ஆசி பெற வேண்டும் என்று இல்லை.அது அவரது விருப்பம் என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அவரது மரியாதையை அவரே குறைத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் உயர் கல்வியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தான் எடுத்த முடிவாக செயல்படக்கூடாது, கல்வியாளர்கள் துணைவேந்தர்களிடம் உரிய ஆலோசனை செய்து முடிவை எடுக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: "பாத்திரத்தை எடுத்து செல்லும் போது சிதறிய சிறு அளவு உணவை மிகைப்படுத்துகிறார்கள்" - ஆர்.பி. உதயகுமார்!

Last Updated :Aug 23, 2023, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.