ETV Bharat / state

"தமிழகத்தில் எம்பிக்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, மோடி ஆட்சி மீண்டும் அமையும்" - அண்ணாமலை உறுதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 2:13 PM IST

En Mann En Makkal Padayatra: தமிழ்நாட்டிலிருந்து ஒரு எம்பிக்கள் கூட கிடைக்கவில்லை என்றாலும், மோடி ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என 'என் மண் என் மக்கள்' முதல் கட்ட யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Annamalai
அண்ணாமலை

Annamalai Speech

திருநெல்வேலி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் முதற்கட்ட பயணம் நெல்லை சட்டமன்ற தொகுதியுடன் நேற்று நிறைவு பெற்றது. நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெற்ற முதல் கட்ட பயண நிறைவு பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "23 நாள் என் மண் என் மக்கள் யாத்திரை தென் மாவட்டங்களில் உள்ள 41 சட்டமன்ற தொகுதியில் நடந்துள்ளது.

இதுவரை சுமார் 184 கிலோ மீட்டர் பயணம் செய்து 17 சதவீத பயணத்தை மேற்கொண்டு இந்த யாத்திரையின் முதல் கட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் இந்தியா மாறியுள்ளது. சாமானிய மக்களை பற்றி சிந்திக்கக் கூடிய ஆட்சி என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்துள்ளது. எங்கே சென்றாலும் லஞ்ச லாவண்யம் இருக்கும் தமிழ்நாட்டில் மக்களின் வசிப்பிடங்களை தேடி எந்தவித சிபாரிசும் இல்லாமல் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

குடும்ப ஆட்சி செய்பவர்களை மட்டுமே ஜனநாயகம் மதிக்கும் என்று இந்தியாவில் இருந்து வந்த நம்பிக்கையை 9 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத சாமானிய மக்களுக்காக அரசு பணி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மோடி கொண்டு வந்து உள்ளார். தென் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த யாத்திரை மாற்றத்திற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளது.

முதல் கட்ட யாத்திரை நிறைவு பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ஜல் சக்தி திட்டத்தின் கீழ் 64% பயனாளிகளுக்கு வீடுகளுக்கே குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி பேருக்கு மத்திய அரசின் மானியத்துடன் கூடிய தரமான அரிசிகள் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நெல்லைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை ரயில்வே துறை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். மோடி ஆட்சி அமைப்பதற்கு முன்பு அரசால் கொண்டு வரும் திட்டங்கள் எதுவும் முடியாது.. முடியாது என பலரும் சொல்லி வந்தனர். மோடி ஆட்சி அமைத்த பின்னர் முடியாததையும் முடியும் என்று செய்து காட்டியுள்ளார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சூழலில் பேசும்போது 100 ரூபாய் மக்களுக்காக மத்திய அரசிடமிருந்து அனுப்பி வைத்தால் மாநில அரசு மூலமாக 15 ரூபாய் மட்டுமே சென்று சேர்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையை மோடி பதவி ஏற்ற பின்னர் மாற்றி காட்டியுள்ளார். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. எரிவாயு மானியம் நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இப்படி அனைத்து திட்டங்களும் நேரடியாக பொதுமக்களை சென்று சேரும் வகையில் மோடி ஆட்சியில் வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உலகறிய செய்துள்ளார். ஒரு காலத்தில் வழங்கப்படும் மத்திய அரசு விருதுகள் அனைத்தும் உயரிய நபர்களுக்கு மட்டுமே கிடைத்த சூழலை மாற்றி சாமானிய ஏழை எளிய மக்களும் பத்ம விருதுகள் பாரத ரத்னா விருதுகள் போன்றவை கிடைக்கும் வகையில் மோடி ஆட்சி அமைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராகிய ஆட்சி அமைப்பார் என்பது அனைத்து நபர்களுக்கும் தெரிந்த ஒன்று.

தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி கூட வரவில்லை என்றாலும், பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது உறுதி. உ.பி., கர்நாடகா., சட்டீஸ்கர்., குஜராத் டெல்லி போன்ற மாநிலத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு வெற்றி வாய்ப்பை தேடி தரும். தமிழக மக்களாகிய நாம் 40க்கு 40 தொகுதியையும் வெற்றி பெறச் செய்வோம் என்ற சொல்ல வேண்டிய தருணம் 2024 பாராளுமன்ற தேர்தல்.

தமிழக மக்களின் அளவு கடந்த அன்பை மட்டும் தான் பாஜக எதிர்பார்க்கிறது. பாரதப் பிரதமர் மீது தமிழக மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துவிட்டால், எப்படிப்பட்ட மனிதனாலும் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு வாக்குப் பெட்டிகள் அனல் பறக்கும் அளவில் வாக்குகள் குவியும்" என தெரிவித்தார்.

மேலும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த உத்வேகத்தை பயன்படுத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து குறைந்தபட்சம் 5 எம்பிக்களையாவது பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்போடு பாஜக செயல்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.

குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை பாஜகவின் மாநில தலைவர் ஆக்கி அவரது பரபரப்பு பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை அக்கட்சி மேலிடம் திரும்பிப் பார்க்க செய்தது என்றே சொல்லலாம்.

மேலும் அதிமுகவுடன் தற்போது வரை கூட்டணியில் இருக்கும் பாஜக பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களை கைப்பற்றுவோம் என்று முழங்கி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு எம்பிக்கள் கூட கிடைக்கவில்லை என்றாலும், மோடி ஆட்சி அமையும் என்று பேசி இருப்பது பாஜகவின் அச்சத்தை வெளிப்படுத்தி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதாவது தமிழ்நாட்டில் என்ன தான் அண்ணாமலை பேச்சால் பாஜகவுக்கு கூட்டம் சேர்ந்தாலும், தேர்தலில் அது பிரதிபலிக்காது என்பதை அவர்களை ஒப்புக் கொள்ளும் வகையில் அண்ணாமலையின் பேச்சு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் அரசியல் விவாத பொருளாகவே மாறும்.

இதையும் படிங்க: சந்திரயான்-3 குறித்த சர்ச்சை பதிவால் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது குவியும் வழக்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.